கிராம அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவுக்கும் 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டு அந்த நிதி பாதியாக வெட்டிக் குறைக்கப்பட்டிருந்தது. வெட்டிக் குறைக்கப்பட்ட நிதி மேலும் வெட்டப்பட்டு 40 மில்லியன் ரூபாவே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியே போதாது என்று தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், அது மேலும் குறைக்கப்பட்டுள்ளது.
கூட்டு அரசினால் குருநாகல் மாவட்டத்தில் கடந்த மாதம் 15ஆம் திகதி கிராம அபிவிருத்தித் திட்டம் (கம்பெரெலிய) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இலங்கையிலுள்ள 330 பிரதேச செயலகங்களுக்கும் தலா 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும். 12 வகையான வேலைகள் அந்த நிதியில் பிரதேச செயலகங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும்.இவ்வாறு திட்ட அறிமுகத்தின்போது நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்தை கடந்த மாதம் வடக்குக்கு வந்த தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க, நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் ஆரம்பித்து வைத்திருந்தனர்.
200 மில்லியன் ரூபாவுக்குரிய திட்டங்களை பிரதேச செயலகங்கள் தயாரித்திருந்தன. கடந்த மாதம் 25ஆம் திகதி தலைமை அமைச்சரின் செயலரினால் அவசர அவசரமாக பிரதேச செயலகங்களுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
திட்டத்துக்கான ஒதுக்கீடு 100 மில்லியன் ரூபா மாத்திரமே என்று குறிப்பிடப்பட்டி ருந்தது. குறைக்கப்பட்ட நிதிக்கு அமைவாக திட்டங்களை மாற்றும் நடவடிக்கைகளை பிரதேச செயலகங்கள் முன்னெடுத்திருந்தன.
இந்த நிலையில் அந்த நிதி 40 மில்லியன் ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளதாக இரண்டு தினங்களுக்கு முன்னர் மீண்டும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரதேச செயலகங்கள் திட்டங்களை மீண்டும் மீளாய்வு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
330 பிரதேச செயலகங்களுக்கும் ஒரே தடவையில் 100 மில்லியன் ரூபா ஒதுக்கும்போது 33 ஆயிரம் மில்லியன் ரூபா தேவைப்படும். திறைசேரியால் அந்தளவு நிதியை ஒரே தடவையில் ஒதுக்க முடியாது என்பதாலேயே, பிரதேச செயலகங்கள் ஒவ்வொன்றுக்கும் 40 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

