உந்துருளியில் பயணித்த இளைஞர் குழுவின் அட்டகாசத்தால் இடைக்காடு மற்றும் பத்தமேனிப் பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இடைக்காடு கலைமகள் சனசமூக நிலையம், அதனோடு இணைந்துள்ள தாய் சேய் நிலையம், 4 வீடுகளின் கேற்கள் என்பவற்றின் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.
இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு 9 மணிக்கும் 10 மணிக்கும் இடையில் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இடைக்காடு கலைமகள் சனசமூக நிலையம் மற்றும் அதோடு இணைந்த நிலையில் உள்ள தாய் சேய் நிலைய யன்னல்களின் கண்ணாடிகள் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. 70 ஆயிரம் ரூபா வரையிலான சேதம் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.அச்சுவேலி – சந்நிதி வீதியில் பத்தமேனியில் உள்ள வலி.கிழக்குப் பிரதேச சபை உறுப்பினரும், வடக்கு மாகாண முதலமைச்சர் பணியாள் தொகுதியைச் சேர்ந்தவருமான நா.இராசேந்திரனின் வீட்டு முன்பக்கக் கேற்றின் தகரங்கள் கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்டும் தகரத்தை முறித்தும் இளைஞர்குழு சேதப்படுத்தியுள்ளது.
பத்தமேனியில் தீத்தாங்குளம் பிள்ளையார் கோயில் பூசகரின் வீட்டுக் கேற்றிலும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இரண்டு வீடுகளின் கேற்றுக்களும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
அச்சுவேலி – சந்நிதி வீதியில் உள்ள வெளிநாட்டில் வசிக்கும் ஆசிரியை ஒருவரின் வீட்டுக் கேற் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
உந்துருளியில் திரிந்த இளைஞர்களின் விசமச் செயலால் பொதுமக்கள் மத்தியில் பதட்டம் நிலவுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. பொது மக்கள் பலரும் திகில் அடைந்த நிலையில் இருப்பதாகக் கூறினர்.
மேற்படி சம்பவங்கள் தொடர்பாக இடைக்காடு கலைமகள் சனசமூக நிலைய நிர்வாகிகள் மற்றும் பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர்கள் தனித் தனியாக அச்சுவேலிப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அச்சுவேலிப் பொலிஸார் சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்திருப்பதாகவும் விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

