தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க முன்வைக்கும் எந்தவொரு அரசியல் தீர்வு யோசனைகளையும் சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். மைத்திரிபாலவும், மகிந்த ராஜபக்சவும் இணைந்து முன்வைக்கும் தீர்வு யோசனைகளையே சிங்கள மக்கள் நம்புவார்கள்.
இவ்வாறு சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் தனித்து இயங்கும் 16 நாடாளுமன்ற உறுப்பி னர்கள் குழுவைச் சேர்ந்தவரான டிலான் பெரேரா தெரிவித்தார்.
சிங்கள மக்கள் சந்தேகித்தால் தமிழ் மக்களுக்குத் தீர்வில்லை, அதனை உணர்ந்து செயற்படவேண்டும் என்று இதே குழுவைச் சேர்ந்த தயாசிறி ஜயசேகர மூன்று தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்த நிலையில், அதே அணியைச் சேர்ந்த டிலான் பெரேரா நேற்று இவ்வாறு கூறினார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:அரசை வீழ்த்த பொது எதிரணியாக நாம் முன்னெடுத்துள்ள போராட்டம் வெற்றியடைந்துள்ளது. அடுத்த கட்டங்களில் நாம் முன்னெடுக்கும் போரட்டங்களுக்கு இது நல்லதொரு ஆரம்பம்.
ரணில் விக்கிரமசிங்கவை வெளியேற்றிவிட்டு புதிய தலைமை அமைச்சரை நியமிக்கவேண்டும். நாம் அதே பழைய போராட்டத்தையே முன்னெடுத்து வருகின்றோம் என்கிற மைத்திரிபால சிறிசேனவின் கருத்துக்களில் உண்மை உள்ளது.
அவர் கூறியதை போல் நாம் பழைய போராட்டத்தையே இன்றும் முன்னெடுத்து வருகின்றோம்.
மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் அதிகரித்துள்ளது, விலை அதிகரிப்பு, வரி அதிகரிப்பு என்ற விடயங்களுக்கு இன்னமும் அரசு தீர்வு பெற்றுக்கொடுக்கவில்லை.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் எமக்கு எந்த முரண்பாடுகளும் இல்லை. அரச தலைவருடன் இணைந்து சுதந்திரக் கட்சியாகவே செயற்பட்டு வருகின்றோம். ஐக்கிய தேசியக் கட்சியை எதிர்ப்பதன் காரணமாகவே நாம் பொது எதிரணியாக அடையாளப்படுத்துகின்றோம்.
இப்போதைய தலைமை அமைச்சரை வெளியேற்ற வேண்டும் என்றால் அதற்கு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவு வேண்டும். மைத்திரிபால சிறிசேன மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோர் இணைந்து முன்னெடுக்கும் ஆட்சியையே மக்களும் விரும்புவார்கள்.
புதிய அரசமைப்புத் திருட்டுத்தனமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இன்று அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வு விடயத்தில் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க முன்வைக்கும் எந்தத் தீர்வையும் பெரும்பான்மை மக்கள் நம்பப் போவதில்லை. அரசியல் தீர்வாக அவர் முன்வைக்கும் அனைத்து தீர்வுகளிலும் குழப்பங்களும், சந்தேகங்களும் உள்ளன என்பதே மக்களின் நிலைப்பாடாகும்.
அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவும், மகிந்த ராஜபக்சவும் முன்வைக்கும் அரசியல் தீர்வு விடயங்களை நாட்டின் சகல மக்களும் ஏற்றுகொள்வார்கள். பெரும்பான்மை மக்கள் முழுமையாக ஆதரிப்பார்கள். மகிந்த ராஜபக்ச மீதான பெரும்பான்மை மக்களின் நம்பிக்கை இன்றும் அவ்வாறே உள்ளது. மகிந்தலு மைத்திரி தரப்பினர் ஒன்றிணையவேண்டும் என்பதே எம் அனைவரதும் நிலைப்பாடாகும்.
அடுத்து எந்தத் தேர்தல் இடம்பெற்றாலும் அதில் மகிந்த ராஜபக்ச யாரை களமிறக்குகின்றாரோ அவரே தலைவராவார். மகிந்த ராஜபக்சவை தலைமை அமைச்சராக்கி மைத்திரிபால சிறிசேனவை அரச தலைவராக்கி சுதந்திரக் கட்சியின் தூய்மையான ஆட்சியை கொண்டுசெல்ல வேண்டும் என்ற நிலைபாட்டில் இருந்து நாம் செயற்பட்டு வருகின்றோம்.
அடுத்த தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் மூலமாகவே மகிந்த ராஜபக்ச தலைமை அமைச்சராவார். அது உறுதியாக நடைபெறும் – என்றார்.

