யாழ்ப்பாணம் கோட்டையில் உள்ள இராணுவத்தினர் வெளியேற வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாண மாவட்டச் செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நேற்றுத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு எழுத்து மூலமாக அறிவிக்கப்படும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பான மாவட்டச் செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது. வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் யாழ்ப்பாணம் கோட்டைக்குள் இராணுவம் குடியிருப்பது தொடர்பில் முடிவெடுக்க வலியுறுத்தினார் இதன்போதே முதல்வர் மேற்கண்டவாறு கூறினார்.யாழ்ப்பாணம் கோட்டைக்குள் இராணுவம் தொடர்ச்சியாக இருப்பதற்காகவே அவர்கள் நிலைகொண்டுள்ளனர் போலத் தெரிகின்றது.எனவே அவர்களின் ஆதிக்கத்தை கோட்டைக்குள் அனுமதிக்க முடியாது.எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு எழுத்து மூலமாக அறிவிக்கப்படும் என்றார்.
இதற்குப் பதில் அளித்த தொல்பொருள் திணைக்கள அதிகாரி, கோட்டைக்குள் இராணுவத்தினர் தற்காலிகமாக சிறிய முகாம் அமைத்து இருந்தனர். அங்கு கட்டுமான வேலைகள் நடப்பதால் அவர்கள் தற்காலிகமான முகாம் ஒன்றை அங்கிருந்த சிறிய இடத்தில் அமைத்துள்ளனர். அதற்கே எமது திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. நிரந்தரமாக அமைக்க அனுமதி கொடுக்கப்படவில்லை என்றார்.

