பௌத்த சாசனம், பௌத்தர்களின் கௌரவம் மற்றும் அவர்களின் உரிமைகள் என்பவற்றைப் பாதுகாப்பதனை நோக்கமாகக் கொண்டு தேவையான பரிந்துரைகளை முன்வைப்பதற்கு பௌத்த உரிமைகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழு ஒன்றை அமைக்க அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பிரதான மகாநாயக்கர்களின் ஆசீர்வாதத்துடன் இந்த ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக சம்மேளனத்தின் தலைவர் ஜகத் சுமதிபால தெரிவித்துள்ளார்.
இந்த ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற ஜனாதிபதி சட்டத்தரணி பாலித பிரணாந்து நியமிக்கப்பட்டுள்ளார். இதன் செயலாளராக ஓய்வு பெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்திரா நிமல் வாகிஸ்ட நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாணைக்குழுவில் 21 பேர் அங்கம் வகிக்கின்றனர்.
இந்த ஆணைக்குழுவுக்கு கருத்துக்கள் ஆலோசனைகள், தகவல்கள், முறைப்பாடுகள் என்பவற்றை சமர்ப்பிக்குமாறு அனைத்து பௌத்த மக்களிடமும், சகல இலங்கையர்களிடமும் ஜகத் சுமதிபால வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தக் கருத்துக்களை எதிர்வரும் 2019 ஜூன் 26 ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாட்டில் சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல பிரச்சினைகள் இருப்பதாகவும், பௌத்தர்களுக்கும் சொல்லமுடியாத பல பிரச்சினை இருப்பதாகவும், அவர்களது பிரச்சினைகளைப் பற்றி எந்தவொரு அரசியல்வாதிகளும் கவனம் செலுத்துவதில்லையெனவும் கடந்த காலங்களில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தொடர்ந்தும் கூறிவந்தமை குறிப்பிடத்தக்கது.

