ஒரு நாடு அபிவிருத்தி அடைய அடைய இராணுவத்தின் தேவையும் வீழ்ச்சியடையும். அதை நாங்கள் மூடி மறைத்துச் செய்யப் போவதில்லை. வெளிப்படையாகக் கூறியே செய்வோம். தெற்கில் சிலருக்கு பிரபாகரனுக்கு உயிரூட்ட வேண்டிய தேவை இருக்கின்றது. இனவாதத்துக்கும் அவர்கள் உயிரூட்டு கின்றனர்.
இவ்வாறு தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
வடக்கு மாகாணப் பாடசாலைகளில் கடமையாற்றும் தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நடைபெற்றது. தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு நியமனம் வழங்கும் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். இந்த நிகழ்வில் அவர் மேலும் தெரிவித்ததாவது,யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு வர வாய்ப்புக் கிடைத்தமைக்கு பெரிதும் மகிழ்ச்சியடைகின்றேன். ஆறுமுகம் நாவலரின் செயற்பாடே இவற்றுக்கு முன்னுதாரணம். அவரின் காலத்துக்குப் பின்னரே இந்துக் கல்லூரிகள் வளர்ச்சியடைந்தன. இந்துக் கல்லூரிகளைப் பின்பற்றியே தென்பகுதிகளில் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன.
இவை அத்தனையும் ஒரு தொடர்புபட்ட விடயமாகும். போரின் பின்னரான காலத்தில் பாடசாலைகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்தது. நாம் அறிவித்திருந்த தகுதிகள் உடையவர்கள் இருக்கவில்லை. தற்போது தகுதியான அனைவரையும் உள்வாங்கும் முகமாக நாங்கள் இந்தச் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளோம்.
680 தொண்டர் ஆசிரியர்களுக்கு நாங்கள் நிரந்தர நியமனங்களை வழங்கியுள்ளோம். நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா ஒவ்வொரு கிழமையும் இனி இது தொடர்பில் எனக்கு நினைவூட்டமாட்டார் என்று நினைக்கின்றேன்.
கல்வியின் சீரழிவு
போருக்கு முன்னர் சிறந்த ஆசிரியர்கள் யாழ்ப்பாணத்தில்தான் இருந்தார்கள். போரால் அனைத்தும் சீரழிந்து போய்விட்டது. அதை நாங்கள் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். அதற்குப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தேவை. ஆசிரியர்களுக்கான பயிற்சிகளை வழங்க கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் நடவடிக்கை எடுப்பார். ஓய்வு பெற்று வெளிநாடுகளில் உள்ளவர்களைக் கொண்டுவந்து இவ்வாறான பயிற்சிகளை வழங்க முடியும் என்று நாங்கள் நம்புகின்றோம்.
நாம் பாடசாலையில் கற்றபோது போட்டி இருந்தது. க.பொ.த உயர்தரம், க.பொ.த சாதரண தரப் பெறுபேறுகள் வெளியாகும்போது யாழ்ப்பாணப் பாடசாலையா? அல்லது எமது பாடசாலையா (கொழும்பு) சிறந்த பெறுபேறுகளைப் பெறும் என்ற போட்டித் தன்மை இருந்தது. ஒக்ஸ்வேர்ட் பல்கலைக் கழகத்துக்கும் யாழ்ப்பாணத்தில் இருந்து தேர்ச்சி பெற்றிருந்தனர். அவர்களின் அதிகமானவர்கள் ஹாட்லிக் கல்லூரி மாணவர்கள். அதில் குறிப்பித்தக்கவர் சுந்தரலிங்கம்.
சிறந்த கல்விச்சேவை
அதேபோன்ற சிறந்த கல்விச் சேவையை நாம் வழங்க வேண்டும். சிறந்த ஆசிரியர்கள் இருக்கும் பட்சத்தில் நாம் அப்படியான கல்வி வளத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். இது போன்ற மேலதிகமான ஆசிரியர்களையும் சேர்த்துக் கொள்ளப் போகின்றோம். விளையாட்டுத் துறை, நடனத்துறை என்பவற்றையும் மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். நாங்கள் பட்டதாரி ஆசிரியர்களையும் அண்மையில் உள்வாங்கியுள்ளோம். நாம் முடிந்த அளவு ஏனைய மாகாணங்களுக்கும் தமிழ் மொழி ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள முயற்சிக்கின்றோம்.
குழப்பக்கூடாது
நாம் ஒன்றித்து இருக்க வேண்டும். அனைவரும் ஒன்றித்துப் பயணிக்க வேண்டும். அதைக் குழப்பும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. யாழ்ப்பாணப் படையினர் தொடர்பில் சில சீர் திருத்தங்கள் நடைபெறுகின்றன. அது எந்த இராணுவத்திலும் நடைபெறக் கூடிய ஒன்று. அதன்போது சில கட்டளைத் தளபதிகளுக்கு நிர்வாகக் கடமைகள் வழங்கப்படும்.
இது இலங்கையில் ஒரு பகுதி. நாங்கள் ஒன்று சேரும்போது இவை இயல்பாகவே நடைபெறும். இங்கு பயங்கரவாதம் இருந்தது. தென்பகுதியிலும் இருந்தது. படிப்படியாகப் பயங்கரவாதம் இல்லாதுபோகும்போது படைச்சீராக்க நிலமைகள் இயல்பாகவே நடைபெறும் – என்றார்.
நிகழ்வு
தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், அமைச்சர் மங்கள சமரவீர, பிரதி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சோ.சோனாதிராஜா, ஈ.சரவணபவன், எம்.ஏ.சுமந்திரன், திருமதி விஜயகலா மகேஸ்வரன் ஆகியோருடன் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், திணைக்கள அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்களின் வாத்திய இசையுடன் நிகழ்வில் விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டனர். யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி மாணவிகளின் வரவேற்பு நடனத்துடன் நிகழ்வு ஆரம்பமானது.
தொண்டர் ஆசிரியர்கள் 457 பேருக்கு நேற்று நியமனங்கள் வழங்கப்பட்டன. 676 தொண்டர் ஆசிரியர்கள் நியமனத்துக்காகத் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் 176 பேருக்கு கொழும்பில் ஏற்கனவே நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன. மிகுதி 494 பேரில் தகைமைகளை நிறைவு செய்தவர்களுக்கே நியமனங்கள் வழங்கப்பட்டன.
தெரிவு செய்யப்பட்ட 5 பேருக்கு நியமனங்களை வழங்கி தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க நியமனம் வழங்கலை ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பிரதி அமைச்சர் காதர் மஸ்தான், வடக்கு மாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் ஆகியோர் வழங்கினர்.
யாழ்ப்பாண மாவட்டச் செயலகம்
கடன்களால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. நிதி அமைச்சர் மங்கள சமரவீர கலந்து கொண்டிருந்தார். கடன்களால் பெண்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர் என்று குறிப்பிட்ட அவர், நுண்கடன் வழங்கும் நிதி நிறுவனங்களைக் கட்டுப்படுத்த சட்டவரைவு கொண்டு வரப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க, வறட்சியால் மக்கள் பாதிக்கப்பட்டனர். தனியாரிடம் கூடிய வட்டிக்கு கடன் பெற்றனர். அதனை மீளச் செலுத்த முடியாமல் திணறினர். இந்த மக்களை மீட்பதற்காகவே, இந்த நிதி உதவி வழங்கும் திட்டத்தைச் செயற்படுத்துகின்றோம். இதற்காக 20 ஆயிரம் மில்லியன் வரையில் தேவைப்படலாம் என்று கணிப்பிடப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு அபிவிருத்தி
வட கிழக்கில் பெரிய அபிவிருத்திகளை மேற்கொள்கிறோம். உல்லாச பயணத்துறையை அதிகரிக்கின்றோம். அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் ஒரு பகுதியினை பெண்தலைமைத்துவக் குடும்பங்களுக்கு வழங்க இருக்கின்றோம். மேலும் போரால் பாதிக்கப்பட்ட வீடுகளை மறுசீரமைக்க பல்வேறு தரப்புக்களுடன் பேசியிருக்கின்றோம்.
போரினால் யாழ்ப்பாணம் மட்டுமல்ல இலங்கையும் அழிந்தது. ஜூலை கலவரம் மக்களிடத்தில் தாக்கம் ஏற்படுத்தியது. விடுதலைப் புலிகள் போராடினார்கள். கொழும்புக்கு அடுத்த நிலையில் யாழ்ப்பாணம் இருந்தது. தற்போது அந்த நிலை இல்லை. எமக்குப் பின்னர் வளர்ச்சியடைய ஆரம்பித்த நாடுகள் இன்று எம்மைத் தாண்டிச் சென்றுவிட்டார்கள் – என்றார்.

