போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் கைதிகளுக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவதாயின், அடையாளங் காணப்பட்ட கைதிகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு 3 அறிக்கைகள் சமர்ப்பிக்க வேண்டும் என சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, சட்டமா அதிபர், நீதி அமைச்சர் மற்றும் மரணதண்டனை உத்தரவைப் பிறப்பித்த நீதிபதி ஆகியோரின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கைகள் ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
நீதியமைச்சரின் அறிக்கை, அமைச்சின் விசேட குழுவினரால் தயாரிக்கப்படும் என சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ள அதேநேரம், குறித்த குழுவினர், கைதிகளின் கருத்துக்களையும் கேட்டறிதல் அவசியமாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.
கைதிகளுக்கு மரணதண்டனையைப் பிறப்பித்த நீதிபதியும் தமது உத்தரவு தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
சட்டமா அதிபரின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையையும் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என சட்டமா அதிபரின் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி குறிப்பிட்டார்.
குறித்த அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் இறுதி அறிக்கையில் ஜனாதிபதி கையொப்பமிட்டதன் பின்னரே மரணதண்டனையை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

