வட மாகாணத்திலுள்ள சில பாடசாலைகளின் மாணவர்கள் குளவிகள் மற்றும் தேனீக்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் கல்வி கற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் குளவிகள் மற்றும் தேனீக்கள் கொட்டி பாடசாலை மாணவர்கள் காயமடைந்த சம்பவங்கள் பதிவாகியிருந்தமை
குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், முல்லைத்தீவு – முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில் தேனீ கொட்டியதில் 40-இற்கும் அதிகமான மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
கல்லூரியின் கட்டடத்திலுள்ள தேன் கூடொன்று கலைந்ததில், இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஆசிரியர் ஒருவர் உட்பட 42 மாணவர்கள் தேனீ கொட்டுக்கு இலக்காகியதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.
காயமடைந்தவர்கள் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஆசிரியர் ஒருவர் உள்ளிட்ட 10 மாணவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஏனையவர்கள் சிகிச்சை பெற்று வௌியேறியுள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியின் கட்டடங்களில் 4 தேன் கூடுகள் காணப்படுவதுடன், பாடசாலைக்கு பின்புறமுள்ள காணியிலுள்ள ஆலமரமொன்றில் சுமார் 11 தேன் கூடுகள் காணப்படுவதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் சுட்டிக்காட்டினார்.
குளவிகள் மற்றும் தேனீக்கள் இயற்கையாகவே இவ்வாறு கூடுகளைக் கட்டுவதால், இயற்கைக்கு முரணாக எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்க முடியாதுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட வலயக் கல்விப் பணிப்பாளர் நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு கூறினார்.
எனினும், இதற்கான மாற்றுத்திட்டமொன்றைக் கையாள்வது தொடர்பில் ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறினார்.
முல்லைத்தீவு – முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியிலுள்ள தேன் கூடுகளை இன்று இரவு அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக மாவட்ட வலயக் கல்விப் பணிப்பாளர் கூறினார்.

