பன்னங்கண்டி கிராமத்தின் அடிப்படைத்தேவைகள் விரைவில் பூர்த்தி செய்யப்படும்
பன்னங்கண்டி சுடர் முன்பள்ளி வளாகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நிதியுதவி வழங்கும் நிகழ்வில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கருத்துத் தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
லண்டன் ஸ்ரீ கனக துர்கையம்மன் ஆலய நிர்வாகத்தினரால் பன்னங்கண்டி கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் புவனேந்திரன் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக கிளி/பன்னங்கண்டி இந்து தமிழ்க் கலவன் பாடசாலை வேலி அமைப்பதற்கு உருபா 75,000/= முன்பள்ளியின் குடிநீர்க் குழாய்க்கிணறு அமைப்பதற்கு உருபா 100,000/= காசோலையாக வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட திருவையாறு வட்டாரத்தின் பிரதேச சபை உறுப்பினர் அருணாசலம் சத்தியானந்தம் கருத்துத் தெரிவிக்கும் போது,
பன்னங்கண்டி மக்கள் கடின உழைப்பாளிகள், மழை வெள்ளத்தினால் அதிகம் இடர்படுவபவர்கள், சொந்தக்காணியற்றவர்களே அதிகமாக இங்கு வாழ்கின்றார்கள் என்றும் கடந்த உள்ளூராட்சிச் சபைத் தேர்தலின் பின் பிரதேச சபையின் செயற்பாடுகள் காரணமாக மெல்ல மெல்ல இக்கிராமத்தல் முன்னேற்றங்கள் ஏற்படுவதை காணக்கூடியதாகவுள்ளது எனவும் வீதி அபிவிருத்தி, வீட்டுத்திட்டம், வீதி வெளிச்சம், மைதான அபிவிருத்தி குடிநீர்த்தேவைகள் வாழ்வாதாரத்திட்டங்கள் கல்வி ஊக்குவிப்புத் திட்டங்கள் என நாம் எதிர்காலத்திலும் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளோம் எனவும் மக்களின் பங்கு பற்றுதல்களோடு இத்திட்டங்களை நாம் தயாரித்துச் செம்மைப்படுத்தவுள்ளோம் எனவும் குறிப்பிட்டார்.
சுடர் முன்பள்ளி ஆசிரியர் தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வில் கௌரவ மாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை கிராம மட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், கட்சி செயற்பாட்டாளர்கள், பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

