வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் அசத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி, இன்னிங்ஸ் மற்றும் 219 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள வங்கதேச அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நார்த் சவுண்டு நகரில் நடந்தது. முதல் இன்னிங்சில் வங்கதேசம் 43 ரன் எடுத்தது. பின் முதல் இன்னிங்சை துவக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கிரெய்க் பிராத்வைட் (121) சதம் கடந்து கைகொடுக்க, 406 ரன்கள் குவித்தது.
இரண்டாவது இன்னிங்சை துவக்கிய வங்கதேச அணி, வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் திணறியது. ஷனான் கேப்ரியல் பந்தில் தமிம் இக்பால் (13), மோமினுல் ஹக் (0), முஷ்பிகுர் ரஹிம் (8), கேப்டன் சாகிப் அல் ஹசன் (12) அவுட்டாகினர். ஹோல்டர் பந்தில் மகமதுல்லா (12), மெகிதி ஹசன் மிராஸ் (2) வெளியேறினர். இரண்டாவது இன்னிங்சில் வங்கதேச அணி 144 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்டாகி’ தோல்வியடைந்தது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கேப்ரியல் 5 விக்கெட் கைப்பற்றினார். இதனையடுத்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 1–0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது டெஸ்ட் வரும் 12ல் கிங்ஸ்டனில் துவங்குகிறது.