செல்போனை திருடிச் சென்ற திருடர்களை மடக்கிப் பிடித்த போலீஸ் கான்ஸ்டபிளுக்கு சம்பளத்துடன் தேனிலவு செல்ல சலுகையை அளித்துள்ளார் பெங்களூரு காவல் ஆணையர்.
பெங்களூரு ஹனுமந்த் நகர், பெலந்தூர் காவல் நிலைய கான்ஸ்டபிளாக பணியாற்றி வருபவர் வெங்கடேஷ் (வயது 31). இவர் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 2.45 மணியளவில் பணியை முடித்துக்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது அப்பகுதியில் துரித உணவகத்தில் வேலைப்பார்க்கும் ஒருவர் வேலையை முடித்துக்கொண்டு செல்போனில் பேசிக் கொண்டே சாலையில் சென்றார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த இரண்டு நபர்கள், செல்போனை பறித்துக் கொண்டு சென்றனர். இதனால் அவர் அலறினார்.
இதைக் கேட்ட வெங்கடேஷ் பைக்கில் 4 கி.மீ தூரம் துரத்திச் சென்று அவர்களின் பைக்கை தள்ளி விட்டு கட்டிப்புரண்டு சண்டை போட்டார். அப்போது ஒருவர் அங்கிருந்து பைக்கை விட்டு தப்பி சென்றார். மற்றொருவரை வெங்கடேஷ் பிடித்து, இரவு ரோந்துப் பணியில் இருந்த போலீஸை அழைத்து பிடித்துக் கொடுத்தார். பிடிபட்ட திருடன் கோரமங்களாவை சேர்ந்த அருண் தயால் (20) என்பது தெரியவந்தது.

