மாகாணசபைத் தேர்தல்களை விரைவாக நடத்த வேண்டும் என்பதற்காக பழைய முறைமைக்கு மீண்டும் செல்வது நியாயமற்றதென உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.
விருப்புவாக்கு முறையில் மாகாண சபைகளுக்குத் தேர்தலை நடத்துவதானது மீண்டும் இனவாதத்துக்கு அத்திவாரம் இடுவதாக அமைந்துவிடும்.
இலங்கை அரசியல் வரலாற்றில் அமைதியான தேர்தலாக கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் அமைந்தமைக்கு புதிய முறைமையே காரணமாகியது.
தேசிய கட்சிகளில் தொங்கிக் கொண்டு இனவாதத்தைப் பரப்பி வாக்குகளைப் பெற்று தமது உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளும் சிறுபான்மைக் கட்சிகள் சில, புதிய முறையில் தமது பங்கு கிடைக்காது போய்விடும் என்பதாலேயே மீண்டும் பழைய முறைக்குச் செல்ல வேண்டும் எனக் குரல்கொடுத்து வருகின்றனர். புதிய முறையில் எந்தவொரு இனத்துக்கும் அநீதி இழைக்கப்படாது.
அரசியல் செய்யும்போது தாம் சார்ந்த இனத்தைப் பற்றி மாத்திரம் யோசிக்கக் கூடாது. அப்படி யோசிப்பதாயின் தனித்துப் போட்டியிட வேண்டும். இதனைவிடுத்து தேசிய கட்சிகளில் தொங்கிக்கொண்டுவந்து உறுப்பினர்களைப் பெற்ற பின்னர் தமது இனத்தை விற்று அரசியல் நடத்துகின்றனர். உத்தேச தேர்தல் முறையின் ஊடாக முஸ்லிம் சமூகத்தின் வாக்குவங்கி குறைவடையாது எனவும் அமைச்சர் நேற்று (06) சபையில் நடைபெற்ற விவாதத்தின் போது சுட்டிக்காட்டினார்.

