ஊழல் மற்றும் மோசடிகள் இந்த நாட்டைப் பொறுத்தவரையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களாகவே மாறிவிட்டன. ஏனென்றால் ஊழல் மோசடிகள் சிறியவையோ அல்லது பெரியவையோ அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அரசு அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை.
முன்னாள் அரச தலைவரான மகிந்த ராஜபக்சவின் தேர்தல் செலவுகளுக்கு சீன நிறுவனம் ஒன்று பெருந்தொகையான பணத்தை வழங்கியதாக அமெரிக்காவிலிருந்து வெளியாகும் நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது. இதில் உண்மை இருப்பதற்கான சாத்தியக் கூறு அதிகமாகவே உள்ளது.
மகிந்த சீனாவுடன் நெருங்கிய தொடர்பு பேணிச் செயற்பட்ட ஒருவர். மகிந்த சீனாவுக்கு மிகவும் நெருங்கிய ஒருவராகவே எப்போதும் இருந்துள்ளார். சீனாவின் தலையீடு இலங்கையில் அதிகரித்துச் செல்வதற்கும் அவரே காரணமாக இருந்துள்ளார்.இவரது காலத்திலேயே சீனா மிக அதிக அளவிலான கடன்களை இலங்கைக்கு வழங்கியது. அந்தக் கடன்கள் வட்டியும்,முதலுமாகச் சேர்ந்து இலங்கையின் குடி மக்கள் ஒவ்வொருவரினதும் தலைகளில் சுமையாக நெரித்துவருகின்றன.
நாட்டு மக்கள் பொருளாதார ரீதியான துன்பங்களை எதிர்கொள்வதற்கு இந்தக் கடன்களே மூலகாரணமாகவும் உள்ளன. இதைவிட, அம்பாந்தோட்டை துறைமுக நிர்வாகம் சீனாவின் வசம் சென்றதற்கும், கொழும்பு துறைமுக நகர அபிவிருத்திப் பணிகளில் சீனா ஈடுபட்டு வருவதற்கும் மகிந்தவே வழிவகுத்தார்.
அதைவிட நாட்டின் கட்டுமானப் பணிகளில் 70வீதமானவை சீன நாட்டின் பொறுப்பில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.தற்போது 40ஆயிரம் வீடுகளை அமைக்கும் பணியிலும் சீனாவே ஈடுபடவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதனால் மகிந்த பதவியில் தொடருவதை சீனா விரும்பியதில் ஆச்சரியம் எதுவுமில்லை.
மகிந்தவின் தேர்தல் பரப்புக்காக சீனா
பெருந்தொகை நிதியை
வழங்கியதாகக் குற்றச்சாட்டு
இந்த நிலையில் 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற அரச தலைவர் தேர்தலின்போது சீன நிறுவனம் ஒன்று தேர்தல் பரப்புரைச் செலவுகளுக்களாக 7.5 மில்லியன் அெமரிக்க டொலர்களை மகிந்தவுக்கு வழங்கியதாக வௌியான செய்தியில் உண்மைத் தன்மை உள்ளதை நம்பக்கூடியதாகவுள்ளது.
இது உணமையாக இருக்குமானால், இதைவிட மிகப்பெரிய மோசடி எதுவும் இந்த நாட்டில் இதற்கு முன்னர் இடம்பெற்றிருக்க முடியாது.
இது தொடர்பாக உடனடியாகவே விசாரணைகளை ஆரம்பி்த்து அதன் உண்மைத் தன்மையைக் கண்டறிவதும், குற்றமிழைத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதும் அரசின் தலையாய கடமையாகும். ஆனால் ஏற்கனவே நடந்த ஊழல் மோசடிகள் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதில் பின் நிற்கும் இலங்கை அரசு இந்த விடயத்தில் பொறுப்புடன் செயற்படுமா என்பது சந்தேகத்துக்கிடமானது.
இலங்கை மின்சாரசபை கடந்த ஆண்டு நான்காயிரத்துக்கும் அதிகமான கோடி ரூபாய்களை நட்டமாகப் பதிவுசெய்துள்ளது. கடந்த ஆண்டுக்கு முந்திய ஆண்டைவிட சுமார் மூவாயிரம் கோடியினால் இந்தத்தொகை உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மின்சார சபையைப்போன்றுதான் ஏனைய அரச நிறுவனங்களும் பெருமளவு நட்டத்தைப் பதிவுசெய்துள்ளன. இந்த நிலையில் நாட்டில் பொருளாதாரமுன்னேற்றம் ஏற்படுமென எவ்வாறு எதிர் பார்க்க முடியும்?நாட்டு மக்களின் வறுமை நிலை தொடர்கதையாவது நாட்டுமக்களுக்கு கவலையும் சிரமமும் தருவதாக அமையும்
மக்களால் தெரிவுசெய்யப்படும் அரசு
மக்களுக்கான தனது கடமையை
நிறைவேற்ற வேண்டியது அவசியம்
மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசு ஒன்றுக்கு முக்கியமான பொறுப்புக்கள் சில உள்ளன. அதில் ஊழல் மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதும், மக்களின்பொருளாதார நலன்களைப் பேணுவதும் பிரதானமானவை.ஆனால் இந்த நாட்டில் இவை நிறைவேற்றப்படுவதாகவே தெரியவில்லை. ஊழல் வாதிகளும் மோசடியாளர்களும், வேறுகுற்றவாளிகளும் சுதந்திரமாக உலவுகின்ற நிலையில், நாட்டின் பாமர மக்கள் வறுமையில் வாடுவதையே இங்கு காண முடிகின்றது.
அரசியல்வாதிகள் எதைச் செய்தாலும் அதை மறுப்பின்றி ஏற்கவேண்டிய பரிதாபநிலையில் நாட்டு மக்கள் உள்ளதைக் காண முடிகின்றது. தேர்தல் வேளைகளில் மட்டுமே மக்கள் முன்பாக வந்து வாக்குப் பிச்சை கேட்பவர்கள், அதன்பின்னர் அவர்களை மறந்து விடுகிறார்கள்.
நேர்மையும் துணிவும்கொண்ட
அரசியல் தலைவரொருவர்
இந்த நாட்டின் ஆட்சிப்பொறுப்பை
ஏற்க வேண்டும்
நேர்மையும் துணிவும்கொண்ட ஒருவர் ஆட்சிப்பொறுப்பை ஏற்கும்போதுதான், இந்த நாட்டைப் பீடித்துள்ள சிரமங்கள் அற்றுப் போவதற்கு வழிபிறக்கும். ஆனால் அத்தகைய ஒருவரை இதுவரை இந்த நாட்டு மக்கள் இனம்கண்டுகொள்ள இயலாதுள்ளனர்.
பொருளாதாரப்பிரச்சினையும் இனப்பிரச்சினையும் தீராத தலைவலியாக உருவெடுத்துக் காணப்படுகின்றன. இனப்பிரச்சினைகாரணமாக நாடுபெரும் அழிவுகளைச் சந்தித்து விட்டது. ஆனாலும் அதற்குத் தீர்வைக் காண்பதற்கான எந்தவொரு ஏற்பாடும் இருப்பதாகத் தெரியவில்லை. இனவாதிகளும் சுயநலவாதிகளும் அரசியலில் ஆதிக்கம் செலுத்துவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
என்னதான் இருந்தபோதிலும், ஊழலுக்கும் மோசடிக்கும் எதிராக நடவடிக்கை எடுத்து அவற்றுடன்தொடர்புடை யவர்களுக்குத் தண்டனை வழங்காத வரையில் இந்த நாட்டின் தலைவிதி மாறவே மாட்டாது.

