சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவரது அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்டாலோ அல்லது அவராகவே விலகினாலோ கூட அவருக்கு எதிரான பொலிஸ் விசாரணைகள் நிறுத்தப்படாது.
இவ்வாறு சட்டம் ஒழுங்கு மற்றும் அரச நிர்வாக, முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் தெரிவித்தாவது-,தமிழீழ விடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்பதே தமது முக்கிய நோக்கம் என்று இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்திருந்தார். இந்தக் கருத்தை முற்றாக எதிர்க்கின்றேன்.
வடக்கிலோ தெற்கிலோ எந்தப் பயங்கரவாதத்துக்கும் இடமளிக்க போவதில்லை. அவரின் சர்ச்சைக்குரிய கூற்றுத் தொடர்பில் ரணில் சட்டமா அதிபரின் ஆலோசனையைக் கோரியுள்ளார். அதன்படி அவர் நடவடிக்கைகளை எடுப்பார்.
பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்றுள்ள முறைபாடுகள் தொடர்பில் தனியான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விஜயகலா பதவி விலகினாலும் விலகாவிட்டாலும் அவ்விசாரணைகள் தொடரும். விரைவில் அவரிடம் வாக்கு மூலம் பெற்றுக்கொள்ளப்படும் – என்றார்.

