பெப்ரவரி பத்தாம் திகதி கிடைத்த வெற்றியின் இரண்டாம் அத்தியாயத்துக்கு தற்போது நாம் வந்துள்ளோம். அதை விளையாடுவதற்கு தயாராகுமாறு கேட்டுக்கொள்கின்றேன். இரண்டாம் அத்தியாயமே வெற்றி அத்தியாயமாக அமையவுள்ளது. அதன் பின்னர் நாம் மீண்டும் மகிந்த சிந்தனையை நாட்டில் முன்னெடுத்துச் செல்வோம் என்று முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எமக்குப் பெருவெற்றி கிடைத்தது. அது சரித்திர முக்கியத்துவமிக்க வெற்றியாகவுமுள்ளது. தேசிய மற்றும் பன்னாட்டு ஊடகங்களில் சரித்திர முக்கியத்துவமிக்க வெற்றியாக குறிப்பிடப்பட்டிருந்தது.எம்மை துடைத்தெறிவதற்கு முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் வெற்றியளிக்கவில்லை. அரசியல்வாதிகள் மக்களுடன் இருக்கும் வரையில் அவர்களை தோற்கடிப்பது இலகுவாக அமையப்போவதில்லை.
கடந்த காலங்களில் எம்மைத் தோற்கடிப்பதற்கு பொய்யான பரப்புரைகளை மேற்கொண்டனர். அதன் மூலம் தமிழ், முஸ்லிம்களை எம்மிடமிருந்து தூரமாக்குவதற்கு நடவடிக்கை எடுத்தனர். தற்போதும் எம்மீது பழிவாங்கலை முன்னெடுத்துச் செல்கின்றனர்.
தற்போது வடக்கின் நிலமை எவ்வாறுள்ளது? வடக்கில் சட்டம் இல்லை. பொலிஸாருக்கு அங்கு செல்ல முடியாது. அந்த நிலமை பற்றி மக்களால் முறையிடவும் முடியாதுள்ளது. தனிப்பட்ட முறையில் எம்மிடம் மக்கள் தெரிவிக்கின்றனர். மக்களால் சுதந்திரமாக வீதியில் செல்ல முடியாது.
தென்னிந்திய சினிமாப் படங்களைப் போல் கிராமத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கின்றனர். நிர்வாகம், தலைவர்கள், அரசு, பொலிஸ் என்று எதுவும் அங்கில்லாத ஏற்பட்டுள்ளது.
இன்றைய நிகழ்வில் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்கச கலந்து கொண்டதையிட்டு சந்தோசமடைகிறேன். ஏனெனில் ராஜபக்ச சகோதரர்கள் சண்டையிட்டுக் கொள்வதாக சிலர் குறிப்பிடுகின்றனர் – என்றார்.

