சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை இலக்காகக் கொண்டு அரசாங்கம் முன்னெடுக்கும் ‘என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டம் சுபீட்சமிகு நாடொன்றைக் கட்டியெழுப்ப உதவும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை வணிக முகாமைத்துவ நிறுவனத்தின் ஆறாவது கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் பிரதமர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
பிரதமர் மேலும் இங்கு குறிப்பிடுகையில்,
பொருளாதார வளர்ச்சியுடன் வேலைவாய்ப்புக்களும் உருவாகும். நாட்டின் வருமானம் கணிசமாக அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். அந்த வகையில் என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் உச்ச அளவு நன்மைகளை பெறும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.
இந்த வேலைத்திட்டத்தின் உச்ச அளவு பயன்களை பெற்றுக்கொள்ளும்படி தனியார் தரப்பிற்கும் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்காக 10 பில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் அபிவிருத்தி நிதிய திணைக்களம் ஒன்று ஸ்தாபிக்கப்படும். இது விடயம் தொடர்பாக அமைச்சரவைப் பத்திரமொன்று விரைவில் சமர்ப்பிக்கப்படும்.
உலக சந்தையில் எமது தயாரிப்புகளுக்கும் சேவைகளுக்கும் உரிய பெறுமதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இந்த வேலைத்திட்டத்திற்கு இருக்கக்கூடிய சவால்கள் குறித்தும் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து பல முதலீடுகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களும் இதற்கு அவசியமாகிறது என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

