தமிழீழ விடுதலைப் புலிகள் எமது மக்கள் சார்பாக மக்களுடைய உரிமைகளுக்காக மிகவும் தீவிரமான ஆயுதப் போராட்டத்தை நடத்தினார்கள். அந்த முயற்சியில் அவர்கள் வெற்றி பெறவில்லை. ஆனால் அந்த முயற்சியில் நீதி இருந்தது, நியாயம் இருந்தது. அதை எவரும் மறுக்க முடியாது.
தமிழ் மக்களுடைய பிரச்சினை தீர்க்கப்பட வில்லை. அவர்களுடைய உரிமைகள் வழங்கப்படவில்லை. உரித்துக்கள் வழங்கப்படவில்லை என்ற அடிப்படையில் ஆயுதப் போராட்டம் நடத்தப்பட்டது. இதை எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள். பன்னாட்டுச் சமூகம் கூட ஏற்றுக் கொண்டது.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்;டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உரைகள் அடங்கிய நூல் வெளியீட்டு விழா வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஆயுதப் போராட்டத்தினூடாக ஒரு முடிவைக் கொண்டு வருவதை இலங்கை அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. அதனைப் பன்னாட்டுச் சமூகத்துக்கும், அரசு கூறி அவர்களையும் அதற்கு இணங்க வைத்தது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முடிவெடுத்தது.
அந்தப் போராட்டத்தை இலங்கை அரசு முடிவுக்கு கொண்டு வருவதற்கு இந்தியா, அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய ராஐ;சியம், ஆஸ்திரேலியா எல்லா நாடுகளும் உதவியது. இந்த நாடுகள் எல்லாவற்றிலும் புலிகள் தடை செய்யப்பட்டார்கள். ஒரு பயங்கரவாத இயக்கமாக புலிகள் வெளிநாடுகளில் தடைசெய்யப்பட்டார்கள்.
இவ்வாறு பல வழிகளிலும் அவர்கள் முடக்கப்பட்டார்கள். அந்தச் செயற்பாட்டின் காரணமாகத் தான் இலங்கை அரசு அவர்களைத் தோற்கடித்தது. தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்காக பன்னாட்டுச் சமூகம் இலங்கை அரசுக்கு முழுமையான ஆதரவை வழங்கியது. இதை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் – என்றார்.

