பொசன் நோன்மதி வாரம் இன்று ஆரம்பமாகிறது.
பொசன் வாரத்தில் அனுராதபுரம் ஜய ஸ்ரீ மஹாபோதி ருவன்வெலி மாகசாய உள்ளிட்ட இடங்களிலும் மிஹிந்தலை தந்திரிமலை மற்றும் பொலநறுவை புனித பூமியிலும் பல்வேறு மத நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
நோன்மதி காலப்பகுதியில் பத்து இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அனுராதபுரம் புனித பூமிக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக அனுராதபுர மாவட்ட செயலாளர் ஆர்.எம்.வன்னிநாயக்க தெரிவிக்கையில் . இவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்கு பொசன் குழு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 200 இற்கும் மேற்பட்ட அன்னதான சாலைகள் இம்முறை பொசன் நோன்மதி காலப்பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவற்றை மதி;ப்பிடும் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
வாராந்த பிரித் பாராணய நிகழ்வின் முதல்நாள் நிகழ்வு நாளை ஆரம்பமாகவுள்ளது. பெரஹர நிகழ்வும் நேற்று இடம்பெற்றது. மிஹிந்தலை வார பிரித் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமானது. மிஹிந்தலை மின்னொளி வழிபாடு எதிர்வரும் 27ம் திகதி முதல் 30ம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. சுற்றாடலை பாதுகாப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு எதிர்பார்க்கப்படுவதாக பிரதேச செயலாளர் தெரிவித்தார். அனுராதபுரத்திற்கு வருகை தரும் பொதுமக்கள் நீராடுவதற்காக ரசவக்குளம் மற்றும் புலன்குளம் ஆகிய குளங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. திசாவேவ குடிநீரை பெற்றுக் கொள்ளவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதால் அதில் நீராட அனுமதி இல்லை. தற்பொழுது குளங்களில் போதியளவு நீர் காணப்படுவதாக மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.
பொசன் நோன்மதி வாரத்தில் அனுராதபுரத்திலுள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும். வெளியில் இருந்து மதுபானம் எடுத்து வருவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

