முல்லைத்தீவு – ஒட்டுசுட்டானில் விடுதலைப்புலிகளின் சீருடைகள், கொடி மற்றும் வெடிபொருள்கள் என்பன சிக்கியுள்ளமையினூடாக வடக்கின் நிலவரம் மோசமடைந்துள்ளதை அவதானிக்க முடிகிறது. அரசு இது விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு மீண்டும் விடுதலைப் புலிகள் இயக்கம் தலைதூக்காமலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அல்லாது போனால் நாட்டில் மீண்டும் மோசமான நிலமை ஏற்படலாம் என்று மகிந்த அணி அரசை எச்சரித்துள்ளது. ஒட்டுசுட்டானிலிருந்து புதுக்குடியிருப்பு செல்லும் வீதியில் நேற்று முன்தினம் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியிலிருந்து வெடிபொருள்கள், விடுதலைப்புலிகளின் சீருடைகள் மற்றும் கொடி என்பன கைப்பற்றப்பட்ட விடயம் தொடர்பில் மகிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர ஜெயக்கொடி மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,
நாட்டில் மூன்று தசாப்த காலமாக நீடித்த போரினால் சகல சமூகங்களையும் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டனர். எமது நாட்டின் பொருளாதாரம் பின்னடைவைச் சந்தித்தது. முன்னாள் அரச தலைவர் மகிந்த தனது ஆட்சி காலத்தில் முழு மூச்சாகப் போரை முடிவுக்கு கொண்டு வந்தார்.போர் நிறைவுக்கு வந்த பின்னர் வடக்கில் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்காக வடமாகாண சபைத் தேர்தலை நடத்தினார். அந்தப் பிரதேச மக்களின் சுதந்திரமான வாழ்க்கை உறுதி செய்யப்பட்டதுடன் கட்டுக் கோப்பான நிர்வாகமும் முன்னெடுக்கப்பட்டு வந்தது. கடந்த ஆட்சியில் பயங்கரவாதம் தலைதூக்கவில்லை.
நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் நாட்டின் பாதுகாப்பு உறுதிப்பாடற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகள் மலிந்துள்ளன. கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் அடிக்கடி இடம்பெற்று வருகிறது. அரசின் முறையற்ற நிர்வாகத்தினாலேயே இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறிருக்கையில் வடக்கில் காணிகள் விடுவிக்கப்படுகின்றன. மக்களின் காணிகள் விடுக்கப்பட வேண்டும். அதில் மாற்றுக்கருத்தில்லை. அதற்கு முன்னர் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்துகொடுக்க வேண்டும். மக்களின் வாழ்வாதாரம் கட்டியெழுப்பப்பட வேண்டும். அது நடைபெறாதபோதே மக்கள் பயங்கரவாதத்தின் பக்கம் ஈர்க்கப்படுவர் – என்றார்.
