பாராளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பு இன்றி கொத்தலாவல பாதுகாப்பு திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இதன் மூலம் சகலரும் ஏற்கக்கூடிய தீர்வு சைற்றம் பிரச்சினைக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு எந்தப் பத்திரிகையும் முன்னுரிமை வழங்கவில்லை.
உயர்கல்வி மற்றும் கலாசார அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ நேற்று பாராளுமன்றத்தில் இவ்வாறு தெரிவித்தார்.
மூன்று வருடங்கள் நீடித்த சைற்றம் பிரச்சினைக்கு சகலரும் ஏற்கும் தீர்வு வழங்கப்பட்ட போதும் ஊடகங்கள் அதற்கு முன்னுரிமை வழங்காமல் பிரதி அமைச்சர் ஹரீஸுடனான விவாதத்தை பெரிதுபடுத்தி காண்பித்திருப்பதாகவும் அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ சாடினார்.
சிறப்புரிமை பிரச்சினையொன்றை முன்வைத்து உயர்கல்வி மற்றும் கலாசார அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ உரையாற்றினார்.சில ஊடகங்கள் நடந்து கொள்வதன் பின்னணியில் வேறு சக்திகள் இருக்கலாமென மக்கள் சந்தேகிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
3 வருடங்களாக பல்கலைக்கழக கட்டமைப்பை செயலிழக்கச் செய்த மக்களுக்கு பிரச்சினையாக இருந்த சைற்றம் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது. இதற்காக 400 க்கும் அதிகமான ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்றன இடம்பெற்றன. இதற்கு ஊடகங்கள் முன்னுரிமை வழங்கியிருந்தன. ஆனால் எதிர்ப்பு இன்றி கொத்தலாவல பாதுகாப்பு திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற முடிந்துள்ளது. சகலரும் ஏற்கக் கூடிய தீர்வு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு எந்தப் பத்திரிகையும் முன்னுரிமை வழங்கவில்லை.
எனக்கும் பிரதி அமைச்சர் ஹரீஸுக்குமிடையில் மோதல் ஏற்பட்டதாக பிரதான தலைப்புச் செய்தி வெளியிடப்பட்டது. ஏற்கெனவே நான் கூறிய விடயமொன்று தொடர்பாக பிரதி அமைச்சர் உரையாற்றினார். அதற்கு நான் நட்பு ரீதியாக பதில் வழங்கினேன். அதனை மோசமான பெரிய மோதலாக பத்திரிகைகள் செய்தி வெளியிடுவது உகந்ததல்ல.
இதனால் சகல எம்.பிகளினதும் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது. நாட்டு நலனுக்காக செய்யப்படும் சேவைகளை தவறாக சித்தரிக்கின்றனர்.
இவ்வாறு செய்தி வெளியிடுவதன் பின்னணியில் வேறு சக்திகள் உள்ளனவா என மக்கள் சந்தேகின்றனர்.
அரசாங்கம் நல்லிணக்கத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகையில் இனவாத உணர்வுகளை தூண்டும் வகையில் சில ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. இது தொடர்பில் சபாநாயகர் கவனம் செலுத்த வேண்டும் உன்று உயர்கல்வி மற்றும் கலாசார அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ கேட்டுக்கொண்டார்.

