பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் மனைவிக்கு லண்டனில் மாரடைப்பு ஏற்பட்டது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும், அவரது குடும்பத்தினர் பல்வேறு நாடுகளில் முறைகேடாக சொத்து சேர்த்தது அம்பலத்துக்கு வந்தது. இதனால், பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அவர் பிரதமர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். நவாஸும், அவரது குடும்பத்தினர் மீது 3 ஊழல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
நவாஸின் மனைவி குல்சூம் (68) தொண்டை புற்றுநோய் காரணமாக லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்ப்பதற்காக நவாஸ் நேற்று முன்தினம் தனது மகள் மரியமுடன் லண்டன் சென்றார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு குல்சூமுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால், அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக மரியம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘நாங்கள் விமானத்தில் இருந்தபோது அம்மாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு விட்டது. அவர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது’ என கூறியுள்ளார்.

