ஜப்பான் நாட்டில் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுவதால் வெளிநாட்டினர் குடியேற்ற விதிகளை அந்நாடு தளர்த்தி உள்ளது.
ஜப்பானில் மக்கள் தொகை கட்டுப்பாட்டு விதிகள் கடுமையாக உள்ளன. அதனால் குழந்தைப் பிறப்புகள் குறைந்துள்ளன. இதன் விளைவாக தற்போது அதிகம் இளைஞர்கள் இல்லாத நிலை உண்டாகி இருக்கிறது. பல இடங்களில் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுவதால் வயது முதிர்ந்தவர்களையும் பெண்களையும் கடினமான பணிகளுக்கு அமர்த்தும் நிலை உண்டாகி இருக்கிறது.
ஆனால் ஜப்பானில் பெண்களும் முதியவர்களும் கூட எண்ணிக்கையில் குறைவாகவே உள்ளனர். இதனால் வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்த ஜப்பான் திட்டமிட்டுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டின் கணக்குப்படி 2,40,000 வெளிநாட்டு தொழிலாளர்கள் உள்ளனர். இது தவிர வெளிநாட்டு மாணவர்களும் பகுதி நேரப் பணியில் பல இடங்களில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் தற்போது 5,00,000 பேர் தேவைப்படுகின்றனர்.
அதனால் வெளிநாட்டு பணியாளர்களை அதிகரிக்க ஜப்பான அரசு குடியேற்ற விதிகளை தளர்த்தி உள்ளது. ஜப்பான் பிரதமர் அபே குடியேற்ற விதிகளை முழுவதுமாக தளர்த்தவில்லை எனவும் அதனால் வெளிநாட்டினர் அதிகம் வர மாட்டார்கள் எனவும் ஜப்பான் மக்களுக்கு உறுதி அளித்துள்ளார்.
