போரால் படு மோசமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின் வாழ்வு சிறக்க இன, மத பேதங்களுக்கு அப்பால் நின்று அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்ற, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய கலாசார பிரதியமைச்சருமான காதர் மஸ்தான் தெரிவித்தார்.
பிரதி அமைச்சராகப் பதவியேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தெரிவித்தாவது-,
எனக்கு இந்தப் பதவியை தந்த இறைவனுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எமது மக்கள் போரின் கோர வடுக்களிலிருந்து இன்னும் மீள முடியாமலிருப்பதை நான் அறிவேன்.அவர்களின் வாழ்வு சிறக்க வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப எனது இந்த பிரதியமைச்சுப் பதவியின் அத்தனை அதிகாரங்களையும் பாவிப்பேன்.
என்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு நன்றிகளைக் கூறும் இவ்வேளையில் அந்த மக்களினதும் எனது மாவட்ட மக்களினதும் பல்வேறுபட்ட தேவைகளையும் நிறைவேற்ற வேண்டிய கடமைப்பாடு எனக்குண்டு என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் – என்றார்.