ஆலயத் தேர்த் திருவிழாவுக்குச் சேலை வாங்கித் தராததால் மனமுடைந்த 18 வயது பாடசாலை மாணவி தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் கொடிகாமம் எருவனில் நேற்று இடம்பெற்றுள்ளது.
வரணி சிட்டிவேரம் கண்ணகை அம்பாள் ஆலயத்தின் தேர்த் திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. பள்ளித் தோழிகள் சேலையுடன் வருவதால் தனக்கு சேலை வாங்கித் தருமாறு தாயாரிடம் கேட்டுள்ளார்.இவருக்கு புது உடை வாங்கிக் கொடுத்தால் ஏனைய இரு பிள்ளைகளுக்கும் புது உடைகள் வாங்க வேண்டுமென்பதால் உடைகள் வாங்கிக் கொடுக்கவில்லை. மாணவி திருவிழாவுக்குச் செல்லவில்லை.
நேற்று ஆலயத்தில் நடைபெற்ற தீர்த்தத் திருவிழாவுக்கு வீட்டிலிருந்தோர் சென்றிருந்த வேளையில் மாணவி தவறான முடிவெடுத்துள்ளார் என்று விசாரணைகளின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆலயத்திலிருந்து வீடு திரும்பிய குடும்பத்தினர் மாணவி தவறான முடிவெடுத்துள்ளமை கண்டு அதிர்ச்சியடைந்து கொடிகாமம் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
பொலிஸார் அங்கு வந்து சடலத்தை மீட்டு சாவகச்சேரி மருத்துவமனை சவச்சாலையில் ஒப்படைத்துள்ளனர்.
இதேவேளை, உயிரிழந்த மாணவியின் குடும்பத் தலைவரான தந்தை, தனியாக வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.