தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் இளைஞர் மாநாடு ஒன்றைக் கூட்டுவதற்கான ஏற்பாடுகளில் விக்னேஸ்வரன் இறங்கியிருக்கிறார்.
கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் இதற்கு முன்னோடியான கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் இளையோர் மாநாடு மிக விரைவில் நடைபெறும் என்று விக்னேஸ்வரன் அறிவித்திருக்கிறார்.
இளையோர் மாநாட்டை தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் நடத்தப் போகிறார் என்ற தகவல் வெளியானதும் தமிழரசுக் கட்சியும் தமது இளைஞர் அணியைப் புதுப்பித்து இளைஞர் மாநாடு ஒன்றை நடத்தும் முயற்சிகளில் ஈடுபட்டது.
அந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகள் இன்னமும் நடைபெறாத நிலையில் முதலரைமச்சர் விக்னேஸ்வரனும் தமிழ் மக்கள் பேரவையும் இளைஞர் மாநாட்டை நடத்துவதற்கான தீவிர நகர்வுகளில் ஈடுபட்டுள்ளனர்.
முதலமைச்சர் விக்னேஸ்வரனின் எதிர்கால அரசியல் நகர்வுகள் இங்கிருந்து தான் கட்டமைக்கப்படவுள்ளது என்ற பரவலான நம்பிக்கை உள்ளது.
இளைஞர் அணி மாநாட்டில் அல்லது அதற்குப் பின்னர் அவர் தமது அரசியல் முடிவுகளை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
ஏற்கனவே அவர் ஒரு கேள்வி பதில் அறிக்கையில் புதிய அரசியல் கட்சியா கூட்டணியா என்று பூடகமான கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார்.
அடுத்த வாரத்தில் இது பற்றிய ஒரு முடிவை அவர் அறிவிப்பார் என்றும் ஊடகங்களில் அண்மையில் செய்திகள் வெளியாகின.
எவ்வாறாயினும் முதலமைச்சர் விக்னேஸ்வரனைப் பொறுத்தவரையில் அரசியல் கட்சி அல்லது கூட்டணி ஒன்றை அமைப்பதற்கான அடித்தளத்தை அமைக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்.
ஏனென்றால் அவரை வடக்கு அரசியல் களத்தில் உயிர்ப்புடன் வைத்திருக்கின்ற முதலமைச்சர் பதவி இன்னும் நான்கு மாதங்களுக்குத் தான் நீடிக்கப் போகிறது.
அதற்குப் பின்னர் அதாவது வடக்கு மாகாணசபைக்குத் தேர்தல் நடத்தப்படும் வரை அவர் வெறும் முன்னாள் முதலமைச்சராகத் தான் இருக்க வேண்டும்.
வடக்கு கிழக்கு உள்ளிட்ட ஆறு மாகாண சபைகளுக்கான தேர்தல் இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தப்படும் என்று ஜனாதிபதி கூறியதாக செய்திகள் வெளியாகின.
டிசம்பரில் மாகாணசபைத் தேர்தல்கள் நடக்கும் என்றும் தகவல்கள் வெளியாகின. எவ்வாறாயினும் அரசாங்கம் எப்போது தேர்தலை நடத்தப் போகிறது என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
வடக்கு மாகாணசபையின் பதவிக் காலம் முடிந்த பின்னர் தேர்தல் அறிவிக்கப்படும் வரையான உறங்குநிலைக் காலம் ஒன்று இருக்கிறது. அந்தக் காலத்தைக் கடப்பது முதலமைச்சர் விக்னேஸ்வரனைப் பொறுத்தவரையில் முக்கியமானது.
வெறும் முன்னாள் முதலமைச்சர் என்ற தகைமையுடன் அவர் அதனைக் கடப்பதை விரும்பவில்லைப் போலத் தோன்றுகிறது.
தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவராக மாத்திரமன்றி ஓர் அரசியல் அணியின் தலைவராக இந்தக் காலகட்டத்தைக் கடப்பதற்கு அவர் விரும்புகிறார். அதற்கு அவருக்கு ஓர் அணி தேவை.
இப்போதுள்ள தமிழ் மக்கள் பேரவை அவ்வப்போது கூடிக் கலைவதற்குப் பொருத்தமானதே தவிர தொடர் அரசியல் நடவடிக்கைகளுக்கும் போராட்டங்களுக்கும் ஏற்புடையதொன்றல்ல.
ஏனென்றால் தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் அரசியல்வாதிகள் சிலரை விட மற்றவர்களில் பெரும்பாலும் ஏதோ ஒரு துறை சார்ந்தவர்கள். முழுநேர அரசியலில் ஈடுபட முடியாதவர்கள்.
மருத்துவராக, ஆசிரியராக, சட்டத்தணைியாக என்று பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள அவர்கள் தமது தொழில்களை தியாகம் செய்து விட்டு வந்து தமிழ் மக்கள் பேரவையுடன் முழுநேரமாகப் பணியாற்றத் தயாரில்லை.
தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்தே அதன் முக்கியமானதொரு குறைபாடாக கூறப்பட்டு வருகின்ற விடயம் இது.
அத்துடன் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் அடுத்த கட்ட அரசியல் பயணத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும் ஒரு தளம் தேவைப்படுகிறது.
தமிழ் மக்கள் பேரவை ஒரு மக்கள் இயக்கம். அது அரசியலில் ஈடுபடாது என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறார். அவர் அதனை கடந்த வாரத்தில் கூட உறுதிப்படுத்தியிருக்கிறார்.
எனவே அந்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டிய நிலையில் இருக்கிறார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதில்லை என்று குற்றம் சாட்டும் முதலமைச்சர் தானும் அதேபோன்று முன்னர் கூறியதற்கு மாறாகச் செயற்பட முடியாது.
அவ்வாறு தமிழ் மக்கள் பேரவையை அரசியல் இயக்கமாக மாற்றினால் முதலமைச்சரின் பெயர் கெட்டு விடும். எனவே தான் இப்போதுள்ள நிலையில் முதலமைச்சரின் அடுத்த கட்ட அரசியல் பயணத்துக்கு ஒரு வலுவான கட்டமைப்புத் தேவைப்படுகிறது.
இளைஞர் அணி என்பது அதற்கான முன்னேற்பாடு தான். இந்த இளைஞர் அணியை ஓர் அரசியல் கட்சிக்கான அடித்தளமாகவும் மாற்றிக் கொள்ளலாம். இல்லாவிட்டால் தேர்தல் வெற்றிக்காக மாத்திரமும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
உடனடியாக இளைஞர் அணியை அரசியல் இயக்கமாக மாற்றுவதற்கு வாய்ப்புகள் குறைவு என்றாலும் இந்த இளைஞர் அணியை தேர்தல் அரசியலுக்கு தேவைக்கு ஏற்றவாறு பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன.
முதலமைச்சர் விக்னேஸ்வரன் வடக்கில் ஒருபகுதி இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றவராக இருக்கிறார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் விவகாரத்தில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்ட நகர்வுகளும் அவரைப் பலப்படுத்தி இளைஞர்களை அவருடன் இணைப்பதற்கான ஒன்றாகவே பலராலும் சந்தேகிக்கப்பட்டது.
இளைஞர் யுவதிகளை தமது பக்கத்துக்கு இழுப்பதில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் வெற்றி கண்டால் வடக்கு மாகாணசபைத் தேர்தலை அவரால் சுலபமாக வெற்றி கொள்ள முடியும்.
ஏனென்றால் வடக்கைப் பொறுத்தவரையில் அரசியல் கட்சிகளுக்காக பிரசாரம் செய்வதற்கும் பணியாற்றுவதற்கும் முன்வருபவர்கள் குறைவு. இளைஞர்கள் தான் துடிப்பாக சுறுசுறுப்பாக பணியாற்றக் கூடியவர்கள்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் கணிசமான வாக்குகளைப் பெற இளைஞர்கள் தான் காரணமாக இருந்தனர்.
இளம் வேட்பாளர்களும் அவர்களுக்காக தீவிரமாக பிரசாரம் செய்த இளைஞர் பட்டாளமும் தான் தமிழ் தேசிய மக்கள் முன்னணியைின் பலமாக இருந்தது.
இத்தகைய பலம் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இல்லை. ஈபிடிபிக்கும் குறைவு.ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளூராட்சித் தேர்தலில் இளைஞர்களை வளைத்துப் போட்டதை மறந்திருக்க முடியாது.
வேலைவாய்ப்பு போன்ற சலுகைகளுக்காக குறிப்பிட்டளவு இளைஞர்கள் அந்தக் கட்சிக்காக பிரசாரம் செய்து கொண்டு திரிந்தனர்.
இந்த நிலையிலேயே இளைஞர் அணியின் மூலம் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது தரப்பை பலப்படுத்தப் பார்க்கிறார். இப்போது இல்லாவிட்டாலும் தேர்தலின் போது இந்தக் கட்டமைப்பு தமக்கு கை கொடுக்கும் என்று அவரும் அவரை ஆதரிக்கும் அணியினரும் வலுவாக நம்புகிறார்கள்.
ஆனால் இந்த இளைஞர் அணிக் கட்டமைப்பை முதலமைச்சர் விக்னேஸ்வரன் எவ்வாறு வழிநடத்தப் போகிறார் என்பது முக்கியமானதாக இருக்கும். இது கயிற்றில் நடக்கின்ற விடயம்.
இளைஞர் அணிக் கட்டமைப்பை உறுதியாகவும் பலமாகவும் வைத்திருப்பதை விட அதனை ஓர் ஒழுங்கிற்குள் வைத்திருப்பது தான் மிக முக்கியமானது.
ஏனென்றால் ஒழுங்கு முறையில் ஏற்படும் தவறுகளுக்கு பொறுப்புக்கூற வேண்டிய நிலையில் முதலமைச்சர் இருப்பார். ஓர் அரசியல் வாதியாக இல்லாமல் ஒரு நீதியரசராக அவ்வாறு பொறுப்புக் கூறுவது அவருக்கு சிக்கலானது.
எவ்வாறாயினும் அவருக்கு அஇத்தகைய கட்டமைப்பை உருவாக்குவதை விட வேறு தெரிவு இல்லை. வேறொரு கட்சியுடன் இணைந்து தனது அரசியல் பயணத்தை முன்னெடுக்க முடியாது.
தமிழ் மக்கள் பேரவையையும் அரசியல் அமைப்பாக மாற்ற முடியாது. கூட்டமைப்புடனும் இணைந்து போட்டியிட முடியாது. வடக்கு அரசியலில் தொடர்ந்து நீடிக்க வேண்டுமானால் அதற்கு இளைஞர் அணி போன்ற அமைப்புகளின் ஊடாகத் தான் பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறான இளைஞர் அணி பலப்படுத்தப்படுவது முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு அவசியமானதாக இருந்தாலும் தமிழ் மக்கள் பேரவையில் உள்ள அவரது அரசியல் கூட்டாளிகள் இதனை எந்தளவுக்கு அணுகப் போகிறார்கள் என்பதும் கேள்விக்குரியது.
ஏனென்றால் இத்தகைய இளைஞர் அணி வலுப் பெறும் போது தமது பலத்தை அது பாதிக்கும் என்று அவர்கள் அஞ்சக் கூடும். ஏற்கனவே தமிழ் தேசிய மக்கள் முன்னணி இதனை விரும்பவில்லை என்ற தகவல்களும் கூட வெளியாகின.
எவ்வாறாயினும் இளைஞர் அணி மாநாட்டிலோ அதற்குப் பின்னரோ முதலமைச்சர் எடுக்கப் போகின்ற முடிவு வடக்கு அரசியலில் பரபரப்பைத் தோற்றுவிக்கலாம்.
தமிழ் மக்கள் பேரவை வடக்கு மாகாணசபைத் தேர்தலில் யாரையும் போட்டியில் நிறுத்தாது. ஆனால் அதன் அனுசரணையுடன் எவரேனும் போட்டியிடலாம் என்றும் முதலமைச்சர் கூறியிருக்கிறார்.
இது வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்கள் பேரவையும் அதன் இளைஞர் அணியும் ஆதிக்கம் செலுத்தப் போகின்றன என்பதற்கான அடையாளங்களாகவே தென்படுகின்றன.