யுத்தத்தில் உயிரிழந்த பயங்கரவாதிகளை விடுதலை போராட்ட வீரர்களாக நினைவுகூருவதற்கு இடமளிக்கக்கூடாதென அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
மஹரகம பகுதியில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கூறுகையில்,
“பயங்கரவாதிகளை நினைவுகூருவதனால் நாட்டில் மீண்டும் பிரச்சினைகள் தோன்றி, இரத்த ஆறு ஓடுவதற்கு வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுகின்றன. அதனை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டும்.
மேலும் தழிழர்களின் தலைவரென கூறப்படும் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெயரை உச்சரிப்பதற்கு தடை விதிக்கப்பட வேண்டும். இல்லாவிடின் பிரபாகரனின் எச்சங்கள் மீண்டும் முளைக்கக்கூடும்.
அதாவது ஜேர்மனியில் ஹிட்லரின் பெயரை உச்சரிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று எமது நாட்டிலும் பிரபாகரனின் பெயரை உச்சரிக்க தடை விதிக்கப்பட வேண்டும். இல்லாவிடின் நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியாது.
அவ்வாறு நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த வேண்டுமென்றால் மக்களுக்கு எதிராக செயற்படும் தரப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் அனைத்து மக்களுக்கும் இடையில் வேற்றுமை ஏற்படாத வகையில் ஒற்றுமை ஏற்படுத்தும் வகையில் செயற்பாடுகளை முன்னெடுப்பது அவசியமாகும்” என சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டார்.