அரசு என்ற வகையிலும் தனிப்பட்டரீதியிலும் நாம் ஒவ்வொருவரும் இந்த சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளைக் கண்டறியும் செயற்பாட்டில் செயலூக்கத்துடன் பங்களிப்புச் செய்ய முடியும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள சுற்றுச் சூழல் தின செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள சுற்றுச்சூழல் தின செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் தொடர்பாக பரந்த கலந்துரையாடலொன்றை ஏற்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் சபையினால் பெயரிடப்பட்ட தினமாக ‘சுற்றுச்சூழல் தினம்’ உலகம் முழுவதும் மிக முக்கியத்துவத்துடன் கொண்டாடப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்படும் கலந்துரையாடல், அர்ப்பணிப்பு என்பன ஓர் நாளுடன் சுருங்கி விடாது எல்லா சந்தர்ப்பங்களிலும், அனைத்து இடங்களிலும் சமூக கவனத்தை ஈர்ப்பது மிகவும் முக்கியமானதாகும்.
சுற்றுச்சூழலானது மானிட இருப்பு மற்றும் முழு உலகினதும் இருப்பு தொடர்பாக கருத்திற் கொள்ளும்போது மிகவும் முக்கியமான காரணியாகக் காணப்படுகிறது. சனத்தொகை அதிகரிப்புடன் இணைந்த நகரமயமாக்கல், ஒழுங்குமுறையற்ற அபிவிருத்திக் கருத்திட்டங்கள், வணிக நோக்கத்தில் மேற்கொள்ளப்படும் இயற்கை வளங்கள் அழிப்பு, சூழல் நேயமிக்க வாழ்க்கை ஒழுங்கிலிருந்து விலகி செயற்கையான மற்றும் உடனடி வாழ்க்கை ஒழுங்குகளுக்குப் பழக்கப்படுதல் போன்ற காரணங்களினால் அண்மைக் காலத்தில் எமது நாட்டிலும் கடுமையான பல சுற்றுச்சூழல் பிரச்சினைகள் ஏற்பட்டன என்பதை நாம் அறிவோம்.
அரசு என்ற வகையிலும் தனிப்பட்டரீதியிலும் நாம் ஒவ்வொருவரும் இந்த சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளைக் கண்டறியும் செயற்பாட்டில் செயலூக்கத்துடன் பங்களிப்புச் செய்ய முடியும். நீர் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்தல், குப்பை கூழங்களை முறையாக வெளியேற்றுதல், மர நடுகைச் செயற்றிட்டங்கள், சூழல் நேயமிக்க வீட்டுத் தோட்டப் பயிர்ச்செய்கைகள், பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்தல், மாற்று வழிமுறைகளை நாடுதல் என்றவாறு நாளாந்;த வாழ்க்கை ஒழுங்கில் நேர்மறையான மாற்றங்கள் ஊடாக தனிப்பட்டரீதியிலும், குடும்பமாகவும், சமூகம் என்ற வகையிலும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவது அத்தியாவசியமானதாகும்.
இம்முறை சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தின் கருப்பொருள் ‘பிளாஸ்டிக் மூலமான மாசடைதலை ஒழித்தல்’ என்பதாகும். பொலித்தீன், பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்பாக எவ்வளவு தான் கலந்துரையாடல்கள் இடம்பெற்றாலும், சட்டத்திட்டங்கள் உருவாக்கப்பட்டாலும் இன்னும் இலங்கையில் பொலித்தீன், பிளாஸ்டிக் பயன்பாடு உயர்ந்த மட்டத்தில் காணப்படுகிறது. இது தொடர்பாக மாற்று வழிகள் பயன்பாட்டை ஊக்குவித்தல், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழிலாளர்களை ஊக்குவித்து சூழல் நேயமிக்க மாற்று உற்பத்திகளுக்கான சந்தையை விரிவுபடுத்தல் என்பன மிகவும் முக்கியமானவையாகும்.
சர்வதேச சுற்றுச்சூழல் தினக் கருப்பொருள் தொடர்பாக கவனத்தைச் செலுத்தி, அர்ப்பணிப்புடன் செயற்பட்டு சூழல் நேயமிக்க வாழ்வினால் ஏற்படும் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் அனுபவிக்க இந்த சுற்றுச்சூழல் தினத்தில் உறுதிபூணுவோம்.
ரணில் விக்கிரமசிங்க
பிரதம அமைச்சர்
2018. 06. 04