கொழும்பிலிருந்து பிபிலை சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றும், எதிர்த்திசையில் வந்த டிப்பர் ரக லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் பல்கலைக்கழக மாணவனின் கை துண்டிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
பஸ்ஸின் வலது பக்கமாக, பின்வரிசையிலுள்ள ஆசனத்தில் பயணித்த குறித்த பல்கலைக்கழக மாணவன், தனது வலது கையை வெளியே நீட்டியவாறு பயணித்துள்ளார்.
இரத்தினபுரி, பெல்மதுளை, சன்னஸ்கம பிரதேசத்தில் வைத்து குறித்த டிப்பர் வாகனம், பஸ்ஸின் வலது பக்கமாக இருந்த குறித்த மாணவனின் கையில் மோதியுள்ளதோடு, மாணவனின் கையும் உடலிலிருந்து வேறாகியுள்ளது.
இதனையடுத்து, துண்டாடப்பட்ட கையுடன் குறித்த மாணவன் இரத்தினபுரி வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.