இறுதிக் கட்டப்போரில் படையினரிடம் சரணடைந்தோ ரின் விவரங்களை எழுத்துமூலமாக வழங்குமாறு எங்க ளிடம் கோரிக்கை விடுத்தால் அவற்றை வழங்க நாம் தயார்.
இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டோரின் விவகாரங்களைக் கையாழும் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்தார்.
காணாமற்போனோர் தொடர்பான விவகாரங்களைக் கண்ட றியும் ஆணைக்குழுவினர் முல்லைத்தீவு மாவட்டச் செய லகத்துக்கு நேற்றுச் சென்றிருந்தனர். காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளிடம் இரண்டாம் கட்ட சாட்சியப் பதிவுகளைப் பெற அவர்கள் சென்றிருந்தனர். அதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.நாங்கள் எத்தனையோ வருடங்களாகப் போராடி வருகிறோம். பல ஆணைக்குழுக்களுக்கு முன்பாகச் சாட்சியமளித்துள்ளோம். எல்லாமே கண்துடைப்பாகவே காணப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் பெயர்ப்பட்டியலை விடுவிக்கவேண்டும், உங்கள் அவுலலகத்தை நாங்கள் நம்பவில்லை என்று பல கருத்துக்களை முன்வத்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் அவற்றைக் கோசங்களாகவும் எழுப்பினர். உள்ளே சென்று சாட்சியமளிக்கவும் அவர்களில் பலர் உடன்பட்டிருக்கவில்லை. பின்னர் சாலிய பீரில் உள்ளிட்ட அணியினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைச் சந்தித்தனர். அவர்கள் இரண்டு அணியாகப் பிரிந்து சென்று ஆர்ப்பாட்டக்காரருடன் கலந்துரையாடினர்.
அதன்பின்னர் அவர் தெரிவித்தபோது மேலும் தெரிவித்ததாவது:
காணாமல் ஆக்கப்பட்டோரின் உணர்வுகளை எங்களால் புரிந்துகொள்ளமுடிகிறது. காணாமற் போனவர்களைக் கண்டறியலாம் என்று நாம் நம்புகிறோம். கடந்த காலங்களைப் போலல்லாது காணாமற்போனோர் விவகாரங்களைக் கண்டறியும் அலுவலகத்தின் செயற்பாடுகள் நம்பத்தகுந்த வகையில் அமையும். அதற்கு பொதுமக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். என்றார்.