தாயுடன் உறங்கிக்கொண்டிருந்தபோது கடத்தப்பட்ட 8 மாதக் குழந்தை புதுக்குடியிருப்பில் நேற்று மீட்கப்பட்டார்.
கடத்திய குழந்தையைத் தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர் என்று புதுக்குடியிருப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா குட்செட் வீதி முதலாம் ஒழுங்கையில் கடந்த 31ஆம் திகதி குழந்தை கடத்தப்பட்டது. 6 பேர் கொண்ட குழுவினரால் குழந்தை கடத்திச் செல்லப்பட்டது என்று பொலிஸ் நிலையக் குற்றத் தடுப்புப் பிரிவில் முறைப்பாடு செய்யபட்டது. பொலிஸார் விசாரணைகளைத் துரிதப்படுத்தினர். ஏனைய பொலிஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.இந்த நிலையில், புதுக்குடியிருப்பு விமானப் படையினர் புதுக்குடியிருப்புப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர். அதன்படி நேற்றுப் பிற்பகல் 3 மணியளவில் குறித்த குழந்தை அங்கு வீடு ஒன்றில் வைத்து மீட்டனர்.
அங்கு குழந்தையை வைத்திருந்த குற்றச்சாட்டிலேயே முல்லைத்தீவு தேவிபுரம் மற்றும் யாழ்பாணத்தைச் சேர்ந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்கள் கைதுசெய்யப்பட்டனர். இந்தத் தகவல் வவுனியா பொலிஸாருக்கு வழங்கப்பட்டது. குழந்தை தாயாரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.
பொலிஸார் குழந்தையின் தாயை புதுகுடியிருப்பு நோக்கி அழைத்து சென்றனர்.
குறித்த குழந்தையை அவரது கணவனே ஆள்களை வைத்துக் கடத்தியுள்ளார் என்று குழந்தையின் தாய் பொலிஸாருக்குக் கூறியிருந்தார். அதனடிப்படையில் விசாரணை இடம்பெற்றது.
ஆனால் குழந்தையைக் கடத்திய குற்றச்சாட்டில் எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.