நான்காம் கட்ட மீளாய்வின் பின்னர் இலங்கைக்கு மேலும் 252 மில்லியன் டொலர் கடனை வழங்குவதற்கு அனுமதியளிக்க பன்னாட்டு நாணய நிதியம் தீர்மானித்துள்ளது.
பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவினால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கைக்கு 1.5 பில்லியன் டொலர் கடனை வழங்குவதற்கான பன்னாட்டு நாணய நிதியத்தின் மூன்றாண்டு நீடிக்கப்பட்ட திட்டத்துக்கான அனுமதி கடந்த 2016 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 3ஆம் திகதி வழங்கப்பட்டது.இதற்கமைய, நாணய நிதியத்தினால் இலங்கைக்கு தற்போது வரை ஆயிரத்து 14 மில்லியன் டொலருக்கும் அதிகமான கடன் தொகை வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இலங்கை தொடர்ந்தும் முன்னேற்றம் அடைந்துள்ளதாக பன்னாட்டு நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டத்திலும், எரிபொரும் விலைகளிலும் சீரமைப்புக்களை மேற்கொண்டமை மற்றும் பணவீக்கம் என்பனவற்றில் சிறந்த அடைவுகளை எய்துள்ளதாக நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

