சிறுமி ஒருவரை துர்நடத்தைக்கு உள்ளாக்கினார் என்று குற்றஞ்சாட்டப்படும் பொலிஸ் அதிகாரியை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் மன்று உத்தரவிட்டது.
14 வயதுச் சிறுமி ஒருவரை துர்நடத்தைக்கு உள்ளாக்கினார் என்று பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. சிறுமியின் தாயும் இதற்கு உடந்தை என்று கூறப்படுகின்றது. சிறுமி இது தொடர்பில் வாக்குமூலம் அளித்திருந்தார். இது தொடர்பில் கடந்த மாதம் கிளிநொச்சி நீதவான் மன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
தாயார் இது தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் சிறுமியை சிறுவர் நன்னடத்தைப் பிரிவில் ஒப்படைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டது. சிறுமி தொடர்பான மருத்துவ அறிக்கையையும் நீதிமன்று கோரியிருந்தது.இது தொடர்பான வழக்கு நேற்று நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. குற்றஞ்சாட்டப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் நீதிமன்றில் முற்படுத்தபப்ட்டார். அவரை எதிர்வரும் 12 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும், அன்று அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறும் நீதிவான் மன்று உத்தரவிட்டது.

