வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை மேலும் நான்கு நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. அந்த நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், மேல், சப்ரகமுவ, ஊவா, தென் மற்றும் மத்திய மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் 100 – 150 மில்லிமீற்றர் வரையிலான மழை வீழ்ச்சி பதிவாகும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, காங்கேசன்துறை முதல் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் இடியுடன்கூடிய கடும் மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்போது காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என்றும், அந்தச் சந்தர்ப்பங்களில் கடல் சற்று கொந்தளிப்பாக இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, கடற்றொழிலில் ஈடுபடுகின்றவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் காலநிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை, அதிக மழை காரணமாக உடவளவை நீர்த்தேகத்தின் வான் கதவொன்று திறக்கப்பட்டுள்ளது.
இதனால், நீர்த்தேகத்தின் தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

