தமிழக ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த விழுப்புரம் தி.மு.கவினர் 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித். மாநில உரிமையில் தலையிடுகிறார் என்று குற்றம் சுமத்தும் தி.மு.கவினர், ஆளுநர் செல்லும் இடங்களில் எல்லாம் கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நிர்மலா தேவி விவகாரம், பெண் செய்தியாளரைக் கன்னத்தில் கிள்ளியது போன்ற தொடர் சர்ச்சைகளில் சிக்கிய ஆளுநர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று விழுப்புரம் மாவட்டத்தில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
இன்று காலை விழுப்புரம் மாவட்டம் ஆரோவில்லில் இருக்கும் ஸ்ரீ அரபிந்தோ சொசைட்டி சர்வம் மற்றும் சிறுவர் பயிற்சி மையத்தைப் பார்வையிட்டு உரையாற்றினார். மாலை 3.30 மணி முதல் 5 மணி வரை பெருந்திட்ட வளாகத்தில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களிடம் புகார் மனுக்களைப் பெறுகிறார். இதற்கிடையில் ஆளுநரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் பொன்முடி தலைமையில் எம்.எல்.ஏ-க்கள் மஸ்தான், ராதாமணி, உதயசூரியன், மாசிலாமணி, சீதாபதி சொக்கலிங்கம், வசந்தம் கார்த்திகேயன் மற்றும் 500-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கறுப்புக்கொடி போராட்டம் நடத்துவதற்காகக் காத்திருந்தனர்.ஆனால், ஆளுநர் ஆரோவில்லிலிருந்து புறப்பட்டு விழுப்புரம் வருவதற்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களைக் கைது செய்து வேனில் ஏற்றியது போலீஸ். அதனால், அந்தப் பகுதி சிறிது நேரம் பதற்றமாகக் காணப்பட்டது.
