சாலையில் நடந்து சென்றவரை மறித்து பேச்சுக் கொடுத்துக்கொண்டே முகத்தில் துணியை அழுத்தி மயக்கமடையச் செய்து நகை, மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று வவுனியா பஜார் வீதியில் இடம்பெற்றது.
தங்கச்சங்கிலி, மோதிரம் உள்ளிட்ட 5 அரைப் பவுண் தங்க நகைகள் கைப்பையில் இருந்த 80 ஆயிரம் ரூபா பணமும் கொள்ளையிடப்பட்டதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டது.
வீதியில் நடந்து சென்ற வயோதிபப் பெண்ணை மறித்து, 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும், ஆணொருவரும், கைக்குட்டை ஒன்றில் சுற்றப்பட்ட கல் ஒன்றைக் காட்டி அது தொடர்பாக வினவியுள்ளனர்.
அந்தப் பெண்மணி அவர்களுக்கு பதில் கூற முனைந்த போது கைக்குட்டையைத் திடீரென அப்பெண்ணின் முகத்தில் அழுத்தி மயக்கமடைய செய்துள்ளனர். இதனால் வயோதிபப் பெண்மணி சுயநினைவை இழந்துள்ளார்.
இதனைப் பயன்படுத்திய கொள்ளையர்கள் நகை மற்றும் பணத்தைக் கொள்ளையிட்டு, அப்பகுதியில் நின்ற முச்சக்கர வண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்தி தப்பிச்சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் சுய நினைவு திரும்பிய பெண் அங்கிருந்தவர்களின் உதவியுடன் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை வவுனியா குற்றத்தடுப்புப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

