மத்திய நெடுஞ்சாலை கட்டுமான முதற் கட்டப்பணிக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை சீன அரசாங்கம் வழங்கவுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இலங்கையிலுள்ள சீன தூதுவர் Cheng Xueyuan இற்குமிடையில் நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின்போது சீன தூதுவர் பிரதமரிடம் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த நிதி சீன வங்கியான எக்ஸிம் வங்கியின் மூலம் கடனாக வழங்குவதற்கு தமது நாட்டு அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியிருப்பதாக தெரிவித்த சீன தூதுவர் இதனை பெற்றுக்கொள்வதற்கான சட்ட மற்றும் நிருவாக ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தித் திட்டம், கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தித் திட்டம் போன்றவை பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதுடன் ஹம்பாந்தோட்டை திட்டத்தில் முதலீடு செய்ய வரும் சீன முதலீட்டாளர்களை ஊக்குவிக்கப் போவதாக தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சீன நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் நீர்விநியோகத் திட்டம் பற்றியும் குறித்த சந்திப்பில் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

