சுமார் ஒன்றரைக் கோடி ரூபா பெறுமதியான அரியவகையான வலம்புரிச் சங்கு மீட்கப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சியில் இருந்து தம்புள்ளை நோக்கி விற்பனை நோக்குடன் காரினுள் மறைத்து எடுத்துச் செல்லப்பட்டபோது அது மீட்கப்பட்டது. அதைக் கொண்டு சென்ற குற்றச்சாட்டில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர் என்றும் தெரிவித்தனர்.
நேற்று முற்பகல் 9 மணியளவில் நொச்சிமோட்டை பாலத்தடியில் கடமையில் இருந்த வவுனியா போதை தடுப்புப் பிரிவைச் சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகர் சுபசிங்கே தலைமையிலான பொலிஸ் சாஜன்ட்களான, அனுராதிசாநாயக, குணதிலக, குமார, கொத்தலாவல, மிதுஷன், கீர்த்தி, பண்டார, ரூபவங்க ஆகியோர் அடங்கிய குழுவினரே சோதனையில் ஈடுபட்டனர். அதன்போதே வலம்புரிச் சங்கு மீட்கப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கிளிநொச்சி, மன்னார் பகுதிகளைச் சேர்ந்த 21, 24 வயதுடைய இருவரும் கைது செய்யப்பட்டனர். இருவரும் நீதிமன்றில் முற்படுத்தப்படுவர். அவர்கள் பயணித்த கார் தடுத்து வைக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
‘கிளிநொச்சியில் உள்ள எமது காணியைத் துப்பரவு செய்யும்போதே குறித்த சங்கு கிடைத்தது. அதனை நாம் கடந்த 3 வருடங்களாக வீட்டில் வைத்து வழிபட்டு வந்தோம். எமது மகன் எமக்குத் தெரியாமேலேயே குறித்த சங்கை விற்பனைக்கு எடுத்துச் சென்றுள்ளான்’ என்று கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவரின் தந்தை தெரிவித்தார்.