சமையல் காஸ் சிலிண்டருக்கான மானியம் ஒரு வருடத்தில் ரத்து செய்யப்படும் என்று தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக தனியார் காஸ் சிலிண்டர் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். நாக்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் காஸ் சிலிண்டர் தயாரிப்பு நிறுவனம் வெடிக்கும் தன்மையற்ற, எடை குறைவான பிளாஸ்டிக் காஸ் சிலிண்டரை உருவாக்கியுள்ளது. இந்த சிலிண்டர் செயல்பாடு தொடர்பான விளக்க நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. அப்போது அந்த நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:எல்லா துறைகளை போன்றே, சமையல் காஸ் சிலிண்டர் தயாரிப்புத் துறையிலும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு உள்ளது. காஸ் சிலிண்டருக்கு அரசு மானியம் வழங்கப்படுவதால் மானியத்துடன் கூடிய காஸ் சிலிண்டரை மக்கள் வாங்குகின்றனர்.
எங்களை போன்ற தனியார் நிறுவனங்கள் மானியம் வழங்குவதில்லை. இதனால் ஓட்டல்கள், பொருளாதார ரீதியில் உயர்நிலையில் உள்ளவர்கள்தான் எங்களிடம் சிலிண்டர் வாங்குகின்றனர். தற்போதைய நிலவரப்படி, இன்னும் ஓராண்டில் சமையல் காஸ் மானியம் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுவிடும் என்று எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பின்னர், பொதுத்துறை நிறுவனங்கள் விற்பனை செய்யும் காஸ் சிலிண்டர் விலைக்கும், தனியார் நிறுவனங்கள் விற்கும் காஸ் சிலிண்டர் விலைக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இருக்காது. அப்போது பொதுத்துறை நிறுவனங்களை விட சிறப்பாகவும் எல்லா நாட்களிலும் 24 மணி நேரமும் எங்கள் நிறுவனம் காஸ் சிலிண்டர் சப்ைள செய்யும். இதுதவிர கடைகள், சூப்பர் மார்க்கெட் என எல்லா இடங்களிலும் சிலிண்டர் விற்கப்படும் என்றனர்.