சிரியாவில் ஈரானுக்கு அனுமதி தொடர்ந்தால் அல்-அஸாதின் ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.தங்களுக்கு எதிராக ரகசியமாக அணு ஆயுதங்களை ஈரான் தயாரித்து வருவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டி வருகிறது. அது தொடர்பான ஆவணங்களை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த வாரம் வெளியிட்டார்.இந்நிலையில் இஸ்ரேலின் எரிசக்தி துறை அமைச்சர் யுவல் ஸ்டெயினிட்ஸ் நிருபர்களிடம் கூறியது: சிரிய மண்ணில் ஈரானை செயல்பட அனுமதிப்பது சிரியாவிற்கு சிக்கலையே ஏற்படுத்தும். சிரியாவில் இருந்து கொண்டு இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் செயல்பட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.சிரியாவின் வடக்கு எல்லையில் ஈரான் நிலை கொண்டுள்ளது. அங்கிருந்து எதிர்காலத்தில் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலுக்கு அவர்கள் திட்டமிடலாம். இதனை உணர்ந்து ஈரானை தனது மண்ணிலிருந்து சிரியா வெளியேறற வேண்டும். இல்லையெனில் இதற்கான விலையை சிரியா கொடுக்க வேண்டியிருக்கும். அதிபர் அல்ஆசாதின் ஆட்சி அகற்றப்படும், என்றார்.ஹாம்ஸ் மாகாணத்தில் ஏப்ரல் மாதம் 9-ஆம் தேதி நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 7 ஈரானியர்கள் உள்பட 14 வீரர்கள் உயிரிழந்தனர். அடுத்து நடத்தப்பட்ட தாக்குதலில், சிரியாவைச் சேர்ந்த 4 பேர் உள்பட 26 வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் ஈரானியர்கள்.இந்த தாக்குதல்களுக்கு இஸ்ரேலே காரணம் என ஈரான் குற்றம் சாட்டி வருகிறது. ஆனால், இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என இஸ்ரேல் மறுத்து வருகிறது.வெளியேறும்போராளிகள்: சிரியாவில் ராஸ்டன் பகுதியை விட்டு கிளர்ச்சியாளர்கள் வெளியேறத் துவங்கியுள்ளனர்.சிரிய அரசு, ரஷ்ய படையுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், வடக்கு சிரியாவிற்கு இப்போராளிகள் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
சிரியாவின் வடக்கு மற்றும் தென் எல்லைகள் இன்னமும் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலேயே உள்ளன.