தேர்தல் பிரசார கூட்டத்தில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஹசன் இக்பால் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் வரும் ஜூலை மாதம் பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக பஞ்சாப் மாகாணம் நரோவால் மாவட்டத்தில் ஆளும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி சார்பில் பிரசார கூட்டம் நேற்று நடந்தது. இதில் உள்துறை அமைச்சர் ஹசன் இக்பால் பங்கேற்க வந்தார்.அப்போதுஅமைச்சர் ஹசன் இக்பால் காரிலிருந்து இறங்கிய போது, கூட்டத்திலிருந்த ஒருவன் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான். இதில் ஒரு குண்டு, அமைச்சரின் தோளில் பட்டது. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பின், அமைச்சர் ஹசன் இக்பால் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக பஞ்சாப் மாகாண அரசு தெரிவித்துள்ளது. துப்பாக்கி சூடு நடத்தியதாக 20 வயது வாலிபரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.