ரஷ்ய அதிபராக நான்காம் முறையாக இன்று பதவியேற்கவுள்ளார் விளாடிமிர் புதின்.
அதிபர் தேர்தலில் புதின் வெற்றி பெற்றதால் பதினெட்டு வருடமாக அவர் வகித்துவந்த நாட்டின் தலைவர் பதவி மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. புதினின் ஆதரவாளர்கள் உலக அரங்கில் ரஷ்யாவின் அந்தஸ்துக்கு விளையாடிமிர் புதின் புத்துணர்ச்சியூட்டியதாக தெரிவிக்கிறார்கள் , ஆனால் எதிராளிகள் அவர் எதேச்சதிகாரமாக ஆள்பவர் என விமர்சிக்கின்றனர். புதினின் அரசியல் எதிரிகளை அந்நாட்டு அதிகாரிகள் தொடர்ந்து கடுமையாக கையாள்வதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சனிக்கிழமையன்று மாஸ்கோ மற்றும் மற்ற ரஷ்ய நகரங்களில் புதின் ஆட்சிக்கு எதிராக போராடியவர்களுடன் வன்முறை தடுப்பு ரஷ்ய காவல்துறையினர் மோதினர்.
திங்கள் கிழமை அவர் பதவியேற்கவுள்ள நிலையில் அங்கே புதியதொரு அமைதியின்மைக்கான அச்சம் நிலவுகிறது .
பதவியேற்பு விழாவானது 2012-ல் நடந்ததைவிட சாதரணமானதாகவே இருக்கும் என்றும், தனது தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்ட தன்னார்வலர்களை மட்டுமே அவர் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுவதாக ஏ எஃப் பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை ரஷ்யா முழுவதும் 19 நகரில் நடந்த கண்டன போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட பாதிபேர் மாஸ்கோவில் போராடி கைதுக்குள்ளானவர்கள்.