செவ்வாய் கிரகத்தின் உள்பகுதியை முதன்முதலாக ஆய்வு செய்யும் விதமாக, ‘இன்சைட்’ என்ற விண்கலத்தை, ‘நாசா’ நேற்று அனுப்பியது.
சூரியனில் இருந்து புதன், வெள்ளி, பூமி ஆகியவற்றுக்கு அடுத்து நான்காவது கோளாக செவ்வாய் உள்ளது. பூமியைப் போல, செவ்வாயும் சூரியனை சுற்றிக் கொண்டிருக்கிறது.
பூமியும், செவ்வாயும் சில பண்புகளை ஒத்துள்ளன. இதன் காரணமாக, பூமியைப்போல, செவ்வாயிலும் உயிரினங்கள் வாழ முடியுமா என்ற ஆராய்ச்சியில் அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் களமிறங்கியுள்ளன.
இதில் குறிப்பாக அமெரிக்காவின் நாசா பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகிறது. தற்போது செவ்வாயின் நிலப்பகுதியை ஆராயும் விதமாக, ‘இன்சைட்’ என்ற விண்கலத்தை, அட்லஸ் ராக்கெட் மூலம் நேற்று அனுப்பியது.
பூமியில் ஏற்படும் நில அதிர்வுகள், நிலநடுக்கம் என அழைக்கப்படுகிறது. பூமி தட்டுகள் ஒன்றோடு ஒன்று மோதும்போது நிலநடுக்கம் ஏற்படுகிறது. அதுபோல, செவ்வாயில் உள்ள நிலப்பகுதியின் இயக்கம் எப்படி உள்ளது என்பதை ஆராய்வதே இந்த விண்கலத்தின் நோக்கம்.
இதனை டென்வரில் உள்ள ‘லாக்ஹீட் மார்டின் விண்வெளி அமைப்பு’ 2010ல் தயாரித்தது. 2016ல் ஏவுவதற்கு திட்டமிடப்பட்டது.
ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, மே 5ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
இந்த விண்கலம் வரும் நவம்பர் மாதம் செவ்வாயில் தரையிறங்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதில் ரோபோ கை, கண்காணிப்பு கேமரா, சோலார் பேனல்கள், வெப்பநிலை மற்றும் காற்றின் வேகத்தை கணக்கிடும் சென்சார் போன்றவை பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் முக்கியமாக இதில் உள்ள ‘சீஸ்மோமீட்டர்’ என்ற நிலநடுக்கமானி கருவி, செவ்வாயின் நிலம் மற்றும் பாறைதட்டுகளின் இயக்கத்தை ஆராயும்.
இதன் மூலம், அங்கு நிலநடுக்கம், எரிமலை போன்றவை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பதை ஆராயும். இரண்டு ஆண்டுகள் பணியில் இருக்கும்.