`உச்ச நீதிமன்ற நீதிபதியையே சக நீதிபதிகள் ஊடகத்தின் முன் விமர்சிக்கும்போது, பல்கலைக்கழகத்தைப் பற்றி ஊடகங்களில் பேச எப்படி தடை போட முடியும்’ என்று முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி அரி பரந்தாமன் பேசினார்.
தமிழகத்தையே அதிர்ச்சியுறவைத்த அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரிப் பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில், விசாரணை முறையாக நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன. உண்மை கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்று, கருத்துகளைக் கூறிய மதுரை காமராஜர் பல்கலைக்கழக அலுவலர்கள் சிலர்மீது நடவடிக்கை எடுத்துள்ளதும், பல்கலைக்கழக ஆசிரியர் அலுவலர் யாரும் இதைப் பற்றி பேசக் கூடாது என்று துணைவேந்தரும், பதிவாளரும் கூறியிருப்பது அனைவரையும் கொந்தளிக்க வைத்துள்ளது.
இந்த நிலையில், காமராஜர் பல்கலைக்கழக பாதுகாப்புக் கூட்டமைப்பு, 4-ம் தேதி மதுரையில் நடத்திய கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி அரி பரந்தாமன், “உச்ச நீதிமன்ற நீதிபதியின் செயல்பாட்டையே, சக நீதிபதிகள் வெளியில் வந்து ஊடகத்திடம் பேசுகிறார்கள். அப்படியிருக்கும்போது காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் செய்தியாளர்களைச் சந்தித்து பேசக் கூடாது என்று துணைவேந்தர் செல்லத்துரை கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நிர்மலா தேவி விவகாரத்தில் பல விஷயங்கள் மறைக்கப்படுகிறது. சமீப காலமாக பல்கலைக்கழகங்களில் மாணவர் சங்கங்கள் ஸ்டிராங்காக இல்லை. மாணவர் சங்கங்களின் பவரை குறைத்துவிட்டார்கள். அப்படி இருந்திருந்தால், மாணவிகளுக்கு எதிரான புகார்கள் வராது. ஆசிரியர் சங்கங்கள் பல்கலைக்கழக முறைகேடுகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராட வேண்டும்” என்று பேசினார்.