ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் எனத் தமிழக அரசு நிர்வாக ரீதியில் நடவடிக்கை எடுக்கும்போது, அதற்கு வேதாந்தா குழுமம் தடையாக இருக்க முடியாது. மக்களின் உணர்வுகளைப் புரிந்துதான் ஆலைக்கான புதுப்பித்தல் அனுமதியை ரத்து செய்யப்பட்டுள்ளது என செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வரும் மே 11-ம் தேதி நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் கோவில்பட்டி 2-வது குடிநீர்திட்டம் துவக்கம், பல்வேறு பணிகள் அடிக்கல் நாட்டுவிழா, முடிக்கப்பெற்ற பணிகள் திறப்பு விழா நடைபெறுகிறது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதற்கான இடத்தினை தேர்வு செய்வதற்காக அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஆட்சியர் வெங்கடேஷ், எஸ்.பி மகேந்திரன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், ”இந்தியாவில் தமிழகத்தில் தான் தனியார் பள்ளிக்கு இணையாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஸ்மார்ட் க்ளாஸ் திட்டத்தினை கொண்டுவரப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் உரிமத்தைப் பெற சட்டப்படியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் எனவும், ஆலையை மூட முடியாது என வேதாந்தா குழுமத்தின் இயக்குநர் கிஷோர் குமார் செய்தியாளர்களிடம் கருத்து சொல்லி உள்ளார். இக்கருத்தால் தமிழக அரசினை கட்டுப்படுத்த முடியாது. ஆலையை மூட வேண்டும் என அரசு நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுக்கும் போது எந்தக் குழுமமும் அதற்குத் தடையாக இருக்க முடியாது. மக்களின் உணர்வுகளை மதித்துத்தான் ஆலைக்கான புதுப்பித்தல் அனுமதியை அரசு ரத்து செய்துள்ளது. தமிழகத்திற்கு மத்திய அரசு பாதகமான திட்டத்தைக் கொண்டு வருவதாகவும், அதற்குத் தமிழக அரசும் இசைந்து கொடுக்கிறது என வைகோ கருத்து சொல்லி வருகிறார். நெடுவாசல் திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது மத்திய அரசிற்கு, மாநில அரசு அழுத்தம் கொடுத்ததால்தான் அத்திட்டம் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டது.வைகோ நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் போதுதான் கெயில் திட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போதெல்லாம் அதனை எதிர்த்து அவர் குரல் கொடுக்கவில்லை. அரசியலுக்காக அவர் அடிக்கடி கூட்டணி மாறுவதால், கூட்டணிக்கேற்ப தனது நிலைப்பாட்டினையும் மாற்றிக்கொள்கிறார். மக்கள் விரும்பாத எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது என்ற எங்களது நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” என்றார்.