மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி, மகிழுர், எருவில் ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக மதுவிற்பனையில் ஈடுப்பட்ட நிலையங்கள் மற்றும் மது உற்பத்தி நிலையங்கள் முற்றுகையிடப்பட்டுள்ளன.
குறித்த நிலையங்களை நேற்று மதுவரித்திணைக் களத்தினர் முற்றுகையிட்டுள்ளனர்.
மதுவரித்திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் பணிப்புரைக்கு அமைய இந்த விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், மாவட்ட மதுவரித்திணைக்கள பொறுப்பதிகாரி ரி.தயாளேஸ்பரகுமார் தலைமையில் மாவட்ட மதுவரித்திணைக்கள உதவி பொறுப்பதிகாரி பி.செல்வராஜா உட்பட மதுவரித்திணைக்கள உத்தியோகத்தர்கள் இந்த விசேட சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது பெருமளவான சட்ட விரோத மதுபானங்கள், கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த சித்தரைப்புத்தாண்டு காலப்பகுதியில் இருந்து விசேட நடவடிக்கைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுவரித்திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதன்போது பலர் கைதுசெய்யப்பட்டு, சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்கள பொறுப்பதிகாரி ரி.தயாளேஸ்பரகுமார் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் நேற்று வரையில் 188 வழக்குகள் நீதிமன்றில் மதுவரித்திணைக்களத்தினால் தாக்கல்செய்யப்பட்டுள்ளதாகவும், இதன்போது 6,26,500ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.