வட கொரியாவின் தலைவர் கிம் ஜொங் உன் தென்கொரிய எல்லையை கடந்து சென்று, அந்த நாட்டின் ஜனாதிபதி மூன் ஜே இன்னை சந்தித்துள்ளார்.
1953ம் ஆண்டு வட தென்கொரிய யுத்தத்துக்குப் பின்னர், வடகொரிய தலைவர் ஒருவர் தென்கொரியா செல்லும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
காலை 10.30 மணி அளவில் இரு நாடுகளின் ஜனாதிபதிகளும் அதிகாரப்பூர்வமாக சந்தித்துப் பேச உள்ளனர். அப்போது அணு ஆயுத குறைப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று தெரியவந்துள்ளது. மாநாட்டின்போது முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மாநாட்டின் நினைவாக பான்முன்ஜியோம் அமைதி கிராமத்தில் மரம் நடப்பட உள்ளது. இதற்காக இருநாடுகளில் இருந்து மண், தண்ணீர் எடுத்து வரப்பட்டிருக்கிறது.
அண்மையில் சீனாவின் ஜனாதிபதியை வடகொரிய தலைவர் நேரில் சென்று சந்தித்திருந்தார். அத்துடன் விரைவில் அவர் அமெரிக்க ஜனாதிபதியையும் சந்திக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.