கத்தார் நாடு பாலைவன பூமி. எண்ணைய் வளம் அதிகம். செல்வச் செழிப்பு மிக்க நாடு. இந்தியர்கள் லட்சக்கணக்கில் வாழ்கின்றனர். சர்வசாதாரணமாக 45 டிகிரி செல்சியஸ் வெயில் வீசும். அனல் பறக்கும் காற்றில் ஏ.சி. இல்லாத வாழ்க்கையை அங்கு யோசித்துப் பார்க்க முடியாது. கத்தார் உள்ளிட்ட வளைகுடா மக்களுக்குக் கண்ணுக்குக் குளிராகக் காட்சியளிப்பது ஈச்சமரங்கள்தாம்.
அண்மையில் நண்பர் ஒருவர் கத்தார் சென்று வந்தார். நாடு திரும்பியவர், ஆச்சர்யத்துடன் ஒரு செய்தியைப் பகிர்ந்து கொண்டார். “கத்தார் தலைநகர் தோஹாவில் நான் சென்ற இடமெல்லாம் நம்ம நாட்டு மரங்களான ஆலம், வேலம், அரச மரங்களைப் பார்த்தேன். சாலையோரங்களில் எல்லாம் நம்ம நாட்டு மரங்களை நட்டு வைத்து வளர்த்து கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன் நடப்பட்ட மரக்கன்றுகள் இப்போது வளர்ந்து சாலையோரத்தில் குட்டி குட்டி மரங்களாகப் பச்சை பசேலென்று காட்சியளிக்கின்றன. மக்கள் கூட்டம் கூட்டமாக அதன் கீழ் ஓய்வு எடுக்கிறார்கள் ” என்றார்.
மேலும், அவர் கூறுகையில், “கத்தாரில் இது போன்ற மரங்களை வளர்க்க இந்தியர்கள்தாம் ஆலோசனை கூறியிருப்பார்கள். கத்தார் நாட்டில் பல்வேறு இடங்களில் செயற்கையாகக் காடுகளை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளனர். நம் நாட்டு மரங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை என்பதால் ஆலம், அரச, வேப்ப மரங்களை வளர்க்க முன்னுரிமை அளிக்கின்றனர்
ஆனால், நாம் சுற்றுச்சூழல் பற்றி எந்தப் புரிந்துணர்வும் இல்லாமல் சாலை விரிவாக்கம் உள்ளிட்ட விஷயங்களுக்கா மரங்களை அழித்து வருகிறோம். பாலைவன தேசத்தில் கூட நம் நாட்டு மரங்களின் அருமையைத் தெரிந்து வைத்துள்ளனர். ஒரு மரத்தை வெட்டினால் 10 மரம் நட்டு வளர்க்க வேண்டும். வளர்த்துக் காட்ட வேண்டும் என்கிற அளவுக்குத் தண்டனையைக் கடினமாக வேண்டும்” என்றார்.

