இந்திய அரசியலமைப்புச் சட்டம் காக்கப்பட வேண்டுமானாலு, கர்நாடகத் தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் தலைவர் சரத் யாதவ் கூறியுள்ளார்.
ஐக்கிய ஜனதா தளம் (சரத் யாதவ் அணி) தலைவர் சரத் யாதவ் பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது இதனை அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்து ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வதாக பிரதமர் மோடி கூறினார். அந்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றவில்லை.
விஜய் மல்லையா நாட்டை விட்டு தப்பியோடி 3-ஆவது திருமணம் செய்து கொள்கிறார் என்றால், அதற்கு பாஜக-தான் காரணம். ரூபாய் நோட்டு ரத்து செய்யப்பட்டதால் சாமானிய மக்களை மோடி அரசு மிக மோசமாக வஞ்சித்து விட்டது.
பாஜக-வின் மதவாதத்தால், நாட்டில் பிரச்சனை ஏற்படுகிறது. மதவாத கட்சியான பாஜக-வை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றி தொலைவில் வைக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். பீகாரில் மெகா கூட்டணி அமைத்தோம். அங்கு பாஜக தோல்வி அடைந்தது. ஆனால் எங்கள் கட்சி முதல்வர் நிதிஷ் குமார் பாஜக-வுடன் சேர்ந்து கொண்டார். எனினும் நாங்கள் பாஜக-வுக்கு எதிராக தீவிரமாக போராடுவோம்.
நாட்டின் அரசியல் சாசனத்தை காக்க வேண்டும் என்றால் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும். கர்நாடகத் தேர்தலை நாடே எதிர்பார்த்து காத்திருக்கிறது. அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்குத் இந்த தேர்தல் அரை இறுதி போட்டி போன்றது ஆகும். பாஜக அல்லாத நாட்டை உருவாக்க கர்நாடகம் தொடக்கமாக அமைய வேண்டும்.
இவ்வாறு சரத் யாதவ் கூறியுள்ளார்.