இராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட 39 இந்தியர்களின் உடலை மீட்டுக் கொண்டுவர மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே. சிங் ஞாயிற்றுக்கிழமையன்று இராக் செல்கிறார்.இராக் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மொசூல் நகரத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூன் 10-ஆம் தேதியன்று 91 வெளிநாட்டவரை ஐஎஸ் பயங்கரவாதிகள் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர். இவர்களில் 40 பேர் இந்தியர்கள். 51 பேர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள்.
கடத்தப்பட்ட 40 இந்தியர்களில் ஹர்மீத் என்பவர் 2015-ஆம் ஆண்டு ஜூலை மாதம் பயங்கரவாதிகளிடம் இருந்து தப்பித்து வந்தார். அப்போது, தன்னைத் தவிர மற்ற 39 இந்தியர்களையும் ஐஎஸ் பயங்கரவாதிகள் படுகொலை செய்ததாகத் தெரிவித்தார். ஆனால், மத்திய அரசு அவரின் தகவல் பொய் என்று கூறிவிட்டது. கடத்தப்பட்டவர்கள் அனைவரும் உயிருடன் இருப்பதாக கடந்த மாதம் வரை தெரிவித்து வந்தது.
மறுபுறத்தில், கடத்தப்பட்டவர்களின் உறவினர்களின் மரபணு மாதிரிகள் எடுக்கப்பட்டு, இராக்கில் கொல்லப்பட்ட நபர்களின் மரபணுவோடு ஒப்பிட்டு சோதனை நடத்தப்பட்டது. இது பெருமளவில் ஒத்துப்போகவே, கடத்தப்பட்ட 39 இந்தியர்களும் கொல்லப்பட்டு விட்டது தெரியவந்தது.இதையடுத்து, ஐஎஸ் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியர்கள் 39 பேரும் கொல்லப்பட்டு விட்டனர் என்று, கடந்த மார்ச் 20-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அறிவித்தார். அதைத்தொடர்ந்து, கொல்லப்பட்டவர்களின் உடல்களையாவது மீட்டுத்தாருங்கள் என்று அவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதனடிப்படையில், மொசூலில் கொல்லப்பட்ட 39 இந்தியர்களின் உடல்களையும் இந்தியா கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, மத்திய அமைச்சர் வி.கே. சிங் ஏப்ரல் 1-ஆம் தேதி இராக் நாட்டுக்கு செல்கிறார்.