தொற்றாத நோய்கள் குறித்த சார்க் நாடுகளின் முதலாவது வருடாந்த மாநாடு இன்று (01) இரண்டாவது நாளாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெறுகின்றது.
கொழும்பில் உத்தியோகபுர்வமாக ஆரம்பமான இம்மாநாட்டில் நேற்றைய தினம், தொற்றாத நோய்களின் பாதிப்பை குறைப்பதற்கு மேற்கொள்ளவேண்டிய செயற்பாடுகள், சார்க் நாடுகளின் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளல் என்பன தொடர்பில் பிரதானமாக கவனம் செலுத்தப்பட்டன.
மரபணு, உடல் மற்றும் சூழல் செயற்பாடுகளினால் ஏற்படும் தொற்றாத நோய்களை கட்டுப்படுத்துவதற்கு உலக சுகாதார தாபனம் அனைத்து நாடுகளிலும் பல்வேறு திட்டங்களை செயற்படுத்துகின்றது. இருதயநோய், புற்நோய், சுவாசநோய்கள், நீரழிவு உட்பட பிரதான தொற்றாத நோய்களுக்கு கீழ் மற்றும் மத்திய தரத்தினரே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகில் வருடாந்தம் 10 மில்லியன் பேர் தொற்றாத நோய்களின் தாக்கத்தினால் உயிரிழக்கின்றனர். இது தவிர புகையிலை பாவனை, உடற்பயிற்சியின்மை, போஷாக்கான உணவு உட்கொள்ளாமை, மதுபான பாவனை என்பன இத்ததைகய தொற்றாத நோய்களுக்கு பிரதான காரணமாகின்றன.
பேண்தகு அபிவிருத்திக்கு தொற்றாத நோய்களின் தாக்கம் தடையாக இருப்பதாக அடையாளங்கண்டுள்ள உலக சுகாதார தாபனம் எதிர்வரும் 2030 ஆம் ஆண்டளவில் தொற்றாத நோயினை முற்றாக கட்டுப்படுத்துவதற்கான செயற்றிட்டத்தை உலக நாடுகளில் செயற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இம்மாநாட்டில் நேற்றைய தினம் இலங்கை சார்பில், சுகாதார, போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியதுறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, பிரதியமைச்சர் பைசல் காசிம், சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக்க சுகததாச ஆகியோர் கலந்துகொண்டனர்.